பெட்டாலிங் ஜெயா – இந்த ஆண்டு சிலாங்கூர் மாநிலத்தில் எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு எழுதும் எல்லா மாணவர்களுக்கும் “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” பயிற்சி நூல்களை மாஹ்சா பல்கலைக் கழகம் சார்பில் டான்ஸ்ரீ ஹனிபா வழங்கியுள்ளார்.
நாட்டின் முன்னணி பல்கலைக் கழகங்களில் ஒன்றாகத் திகழும் மாஹ்சா பல்கலைக் கழகம் 2019-ஆம் ஆண்டில் எஸ்பிஎம் தேர்வில் தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுக்கும் இந்திய சமூக மாணவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களுக்கு ஆதரவு தரும் வகையிலும் இந்த பயிற்சி நூலை சிலாங்கூர் மாநில மாணவர்களுக்கு இலவசமாக வழங்குகிறது.
5 மாதிரி கேள்வித் தாள்களையும் அதற்குரிய உத்தேச பதில்களையும் இந்த தேர்வு வழிகாட்டி நூல் கொண்டிருக்கும். இந்த நூலைக் கொண்டு பயிற்சி பெறுவதன் மூலம் எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களின் திறனைக் கூர்மைப்படுத்திக் கொள்ள முடியும் என்பதோடு, தேர்வுக்கு முன்னோட்டமாக சிறந்த பயிற்சிக் களமாகவும் இந்த நூலைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
வி ஷைன் நிறுவனம் இந்த எஸ்பிஎம் தமிழ்மொழி தேர்வு வழிகாட்டி நூலைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறது.
இந்திய மாணவர்கள் அதிகமான அளவில் எஸ்பிஎம் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும் என்னும் நோக்கிலும், தமிழ்மொழியின் வளர்ச்சி, தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுக்கும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் போன்ற நோக்கங்களோடும், மாஹ்சா பல்கலைக் கழக நிர்வாகத் தலைவரும் துணை வேந்தருமான டான்ஸ்ரீ டாக்டர் ஹாஜி முகமட் ஹனிபா அவர்கள் தனிப்பட்ட கவனம் செலுத்தி இந்தத் திட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை, ஆகஸ்ட் 6, 7-ஆம் தேதிகளில் மலாயாப் பல்கலைக் கழகத்தில் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள எஸ்பிஎம் தமிழ் மொழி மற்றும் இலக்கியம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கென நடத்தப்பட்ட இருநாள் பயிலரங்கில், முதல் நாள் பிற்பகலில் நேரில் வந்து கலந்து கொண்டு, அந்த ஆசிரியர்களின் மூலமாக மாணவர்களுக்கான இந்த நூல்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை டான்ஸ்ரீ ஹனிபா செய்தார்.
அந்த பயிலரங்கு நிகழ்ச்சியில் ஆசிரியர்களிடத்தில் உரையாற்றிய ஹனிபா “மாணவர்களை ஏற்றிவிடும் ஏணியாக ஆசிரியர்களாகிய நீங்கள் திகழ்கிறீர்கள். அர்ப்பணிப்பு உணர்வோடு நீங்கள் அனைவரும் பணியாற்றுகிறீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். அதே சமயத்தில் உங்கள் வகுப்பு மாணவர்களில் கல்வியில் மிகவும் பின்தங்கிய மாணவர்களைக் கைவிட்டு விடாமல் அவர்கள் மீதும் கவனம் செலுத்தி, அக்கறையோடு அவர்களையும் கல்வியில் மேம்படச் செய்தால் நமது சமூகம் இன்னும் மேலோங்கும்” என்று கூறினார்.
மாணவர்களுக்கான பயிற்சி நூல்களை இலவசமாக வழங்கி உதவிய டான்ஸ்ரீ ஹனிபாவுக்கு ஏற்பாட்டாளர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டதோடு, அவருக்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தியும் சிறப்பு செய்தனர்.
சிலாங்கூர் மாநிலத்தில் எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களின் தமிழ் மொழி ஆசிரியர்களின் வாயிலாகத் தங்களைப் பதிந்து கொண்டு இந்த நூலைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த நூலை இலவசமாகப் பெற்றுக் கொள்வது தொடர்பில் கீழ்க்காணும் கைப்பேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்: