Home One Line P0 “ஜாகிர் நாயக்கின் சர்ச்சைப் பேச்சு – ஐஜிபியிடன் முறையிட்டேன்” – டத்தோ முருகையா தகவல்

“ஜாகிர் நாயக்கின் சர்ச்சைப் பேச்சு – ஐஜிபியிடன் முறையிட்டேன்” – டத்தோ முருகையா தகவல்

1366
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியாவில் பல்இன மக்கள் நல்ல புரிந்துணர்வுடனும், அன்பு பாராட்டியும் வாழ்ந்து வரும் நிலையில் மதபோதகர் ஜாகிர் நாயக் போன்றவர்களால் அதற்குக் குந்தகம் ஏற்படுமோ? எனும் அச்சம் தலைதூக்கி உள்ளதாகப் பிரதமர் துறை முன்னாள் துணை அமைச்சர் டத்தோ முருகையா தெரிவித்துள்ளார்.

ஜாகிர் நாயக் தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பில் காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிக்கை ஒன்றில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“அண்மையில் கிளந்தானில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜாகிர் நாயக் மலேசியாவில் உள்ள இந்துக்கள், இந்தியாவில் உள்ள இஸ்லாமிய சமூதாயத்தினரை விட நூறு மடங்கு நன்றாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதேபோல் மலேசியாவில் உள்ள இந்துக்கள் நம் நாட்டுப் பிரதமர் துன் மகாதீரை ஆதரிக்காமல் இந்தியப் பிரதமர் மோடியை ஆதரிப்பதாகவும் கூறியுள்ளார். எந்த ஆய்வின்படி அவர் இவ்வாறு கூறுகிறார். இது தொடர்பான புள்ளி விவரங்கள், சான்றுகள் ஏதேனும் உள்ளதா?” என்றும் மஇகா தேசிய உதவித் தலைவரான டத்தோ முருகையா கேள்வி எழுப்பினார்.

#TamilSchoolmychoice

“ஜாகிர் நாயக்கின் இந்தப் பேச்சு யாரும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. மலேசியா பல்லின மக்கள் சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழும் நாடு. இங்குள்ள இணக்கமான சூழ்நிலைக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் யாரும் எத்தகைய கருத்தையும் வெளியிடக்கூடாது. ஜாகிர் நாயக் மேற்குறிப்பிட்ட இரு கருத்துகளின் மூலமாக எதை உணர்த்த விரும்புகிறார் என்று தெரியவில்லை. எனினும் அவரது இந்தப் பேச்சு மலேசியாவில் பல்லின மக்களுக்கு இடையேயான ஒருமைப்பாட்டை, சகோதரத்துவத்தைச் சீர்குலைத்து விடுமோ என்று அச்சமாக உள்ளது,” என்றும் டத்தோ முருகையா கூறியுள்ளார்.

சில குற்றச்சாட்டுகளின் பேரில் இந்திய அரசால் தேடப்படும் ஒருவர் மலேசியாவில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டு நாட்டின் மத நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் கருத்துகள் வெளியிடுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர் , இது தொடர்பாக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

“நேற்று காலை காவல்துறை தலைவர் (ஐஜிபி) டத்தோஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோரிடம் கைபேசி குறுந்தகவல் வழி ஜாகிர் நாயக் தொடர்பான எனது வருத்தத்தைத் தெரியப்படுத்தி இருந்தேன். அதற்கு தாம் மெக்காவில் இருப்பதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் ஐஜிபி பதிலளித்துள்ளார்” என்றும் முருகையா அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்துள்ளார்.

“ஜாகிர் நாயக் இந்தியாவில் உள்ள பிரச்னைகள் குறித்து எதை வேண்டுமானாலும் பேசட்டும். அதேபோல் மலேசியாவில் இஸ்லாம் தொடர்பாகவும் போதனை செய்யட்டும். ஆனால், மலேசியாவில் உள்ள இந்துக்கள் பிரதமர் மோடியை ஆதரிப்பதாகக் கூறுவதன் நோக்கம் என்ன? இதனால் அமைதியான சூழலில் வாழும் மலேசிய இந்தியர்கள் மத்தியிலும் பிற இனத்தவர்களுக்கு இடையே வீண் மோதல்கள் ஏற்பட வேண்டுமென விரும்புகிறாரா? இத்தகைய போக்கை அனுமதிக்கக் கூடாது,” என டத்தோ முருகையா தெரிவித்துள்ளார்.