Home One Line P1 “அரபு சித்திர எழுத்துகளின் அறிமுகத்தில் எனக்கு உடன்பாடில்லை” – வேதமூர்த்தி

“அரபு சித்திர எழுத்துகளின் அறிமுகத்தில் எனக்கு உடன்பாடில்லை” – வேதமூர்த்தி

915
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தாய்மொழிப் பள்ளிகளில் அரபு மொழி சித்திர எழுத்துகள் அறிமுகப்படுத்தப்படுவதில் உடன்பாடில்லை என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

“அமைச்சரவை உறுப்பினர்கள் பெரும்பாலோருக்கு இதில் உடன்பாடு இல்லை. மேலும், திடீரென்று அறிவிப்பு செய்யப்பட்டதால் இது குறித்து கருத்து தெரிவிக்க அவகாசம் இல்லாமல் போய்விட்டது” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

“புதுமையான உலகத்தில் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க எவ்வளவோ இருக்கின்றன. மாணவர்களும் தெரிந்து கொள்வதற்கு எத்தனையோ விசயங்கள் இருக்கின்றன. அப்படி இருக்கும்போது, என்னைப் பொறுத்தவரை தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு இந்த அரபு சித்திர எழுத்தைக் கற்றுக் கொடுப்பது தேவையில்லாதது என்றுதான் கருதுகிறேன்” என இதன் தொடர்பில் தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவின் தமிழ்ப் பிரிவிற்கு வழங்கிய நேர்காணலின்போது மலேசிய முன்னேற்றக் கட்சியின் தலைவருமான பொன்.வேதமூர்த்தி கூறினார்.

#TamilSchoolmychoice

“பெரும்பாலான மாணவர்கள் பட்டதாரிகளாகவும் உயர்க்கல்வி பெற்றவர்களாகவும் இருக்கின்றனர். அதேசமயம், வேலைவாய்ப்பு இன்மைப் பிரச்சனையை எதிர்நோக்கியும் இருக்கின்ற இன்றைய காலக்கட்டத்தில் வளரும் தலைமுறைக்கு பொருத்தமான குறியீட்டு முறை அல்லது நிரலாக்கம்(Coding) குறித்துகூட கற்பிக்கலாம். இது, அன்றாட வாழ்வில் தொடர்புடைய விற்பனை மற்றும் கொள்முதல் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்த உதவும்” என்று மலேசிய முன்னேற்றக் கட்சியின் (எம்.ஏ.பி.) தலைவருமான பொன்.வேதமூர்த்தி குறிப்பிட்டார்.

“அதேவேளை, அரபு சித்திர எழுத்துக்களை கற்றுக் கொள்ள விரும்பும் மாணவர்கள் தனிப்பட்ட முறையில் கற்றுக் கொள்ளலாம். தமிழ்ப் பள்ளிக்கு இத்தகைய நடைமுறை ஒத்துவராது. மாணவர்களும் பள்ளி வாழ்க்கையை சுமையாகக் கருதும் அளவிற்கு பாடத்திட்ட முறை இருப்பதால், அதைக் குறைப்பதைப் பற்றியும் பள்ளிக்கூட வாழ்க்கையை மாணவர்கள் இன்னும் விரும்பும் அளவுக்கு அதை மறு சீரமைப்பு செய்வது குறித்தும் சிந்திப்பதுதான் பொருத்தமாக இருக்கும்” என்று தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி இதன் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் கருத்துரைத்தார்.