ஹாங்காங் – இன்று திங்கட்கிழமை விமான நிலையத்தை ஜனநாயகப் போராளிகள் முற்றுகையிடத் தொடங்கியிருப்பதைத் தொடர்ந்து, இன்றைக்கு எஞ்சியிருந்த அனைத்து விமானப் பயணங்களையும் ஹாங்காங் விமான நிலைய அதிகாரிகள் இரத்து செய்திருக்கின்றனர்.
இன்று நான்காவது நாளாக ஜனநாயகப் போராட்டவாதிகள் விமான நிலையத்தின் மைய வளாகத்தை முற்றுகையிட்டு குழுமத் தொடங்கியிருக்கின்றனர்.
கடந்த ஜூன் மாதம் தொடங்கி சீன அரசாங்கத்திற்கும், ஹாங்காங் அரசாங்கத்திற்கும் எதிரான போராட்டங்களை ஜனநாயகப் போராட்டவாதிகள் நடத்தி வருகின்றனர்.
திங்கட்கிழமை ஹாங்காங்கிலிருந்து புறப்படும் விமானப் பயணங்களில் பயணிகள் தங்களின் சோதனை நடவடிக்கைகளை முடித்துக் கொண்ட விமானப் பயணங்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்படுகிறது என்றும் மற்ற புறப்பாடு விமானப் பயணங்கள் அனைத்தும் இரத்து செய்யப்படுவதாகவும் ஹாங்காங் விமான நிலையம் அறிவித்தது.
அதே போன்று, ஹாங்காங்கை நோக்கி மற்ற நாடுகளில் இருந்து புறப்பட்டு விட்ட விமானங்கள் மட்டுமே தரையிறங்க அனுமதிக்கப்படும் என்றும் மற்றபடி ஹாங்காங் வரவிருந்த அனைத்து விமானப் பயணங்களும் இரத்து செய்யப்படுவதாகவும் ஹாங்காங் விமான நிலையம் தெரிவித்துள்ளது.
இந்தப் போராட்டங்கள் மூலம் ஹாங்காங்கின் பொருளாதாரம் பெரிதும் நலிவடைந்திருப்பதோடு, சுற்றுப் பயணத் துறையும் பெருமளவில் பாதிப்பை எதிர்நோக்கியிருக்கிறது. ஹாங்காங் பங்குத் சந்தை வீழ்ச்சியடைந்து அதன் காரணமாக பல பணக்காரர்கள் தங்களின் பங்குடமை மதிப்பில் கணிசமான சரிவை சந்தித்திருக்கின்றனர்.