ஹாங்காங் – இங்கு தொடர்ந்து நடைபெற்று வரும் மக்களின் ஜனநாயகப் போராட்டம் யாரைப் பாதித்துள்ளதோ, குறிப்பாக ஹாங்காங்கின் பெரும் பணக்காரர்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது.
ஹாங்காங்கிற்குள் வந்த சுற்றுப் பயணிகள் வெளியேற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்திகள் ஒரு பக்கம் வந்து கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கத்திலோ, ஹாங்காங் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் பெரிய நிறுவனங்கள் பலவற்றின் உரிமையாளர்கள் தங்களின் நிறுவனப் பங்குகள் பெரிய அளவில் விலை சரிவைச் சந்தித்திருப்பதால், தங்களின் சொத்துகளில் கணிசமான பகுதியை இழந்திருக்கின்றனர் எனத் தெரிவிக்கின்றன வணிக ஊடகங்கள்.
ஹாங்காங்கின் முதல் பத்து பணக்காரர்கள் தங்களின் சொத்துகளில் சுமார் 19 பில்லியன் டாலர்களை பங்குச் சந்தைகளின் வழி, கடந்த ஜூலை 23-ஆம் தேதி முதல் இழந்திருக்கின்றனர் என கணிக்கப்படுகிறது.
ஹாங்காங்கின் மிகப் பெரிய பணக்காரரான லீ கா ஷிங் தனது பங்குச் சந்தை மதிப்பில் 9 விழுக்காட்டை இழந்துள்ளார். இதன் மதிப்பு மட்டும் சுமார் 2.7 பில்லியன் டாலராகும்.