கோலாலம்பூர்: நாட்டின் பன்முக கலாச்சார சமூகத்தின் சகிப்பின்மை குறித்து, முன்னாள் உள்துறை அமைச்சர் சைட் ஹாமீட் அல்பார் கவலை தெரிவித்துள்ளார்.
“மலேசியா ஒரு கடினமான மற்றும் ஆபத்தான கட்டத்தை கடந்து வருகிறது. ஒருவருக்கொருவர் சகிப்புத்தன்மை இல்லாது திசை மாறி போய் கொண்டிருக்கின்றனர். இனம், மதம் மற்றும் தேசிய கலாச்சாரத்தின் அடிப்படையில் பயன்படுத்தப்படும் சொல்லாடல்களை குறித்து நான் கவலைப்படுகிறேன். நாம் கவனமாக இல்லாவிட்டால், இது வரையிலும் கட்டிக் காத்த அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும்” என்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இனவெறி மற்றும் மத ரீதியான பல சர்ச்சைக்குரிய கொள்கைகளை அடுத்து சைட் ஹாமிட் இவ்வாறு கருத்துரைத்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை, டோங் சோங் அமைப்பை, பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், ஓர் இனவெறி அமைப்பு என்று அழைத்துள்ளார். மேலும், அவர்களுக்கு மலாய்க்காரர்களைப் பிடிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனை அடுத்து, பெர்சாத்து அமைப்பின் இளைஞர் பகுதியினர் டோங் சோங்கை தடை செய்யக் கோரி ஆதரவு மனுவை கேகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
“மற்றவர்களின் அல்லது மக்களின் பலவீனங்களைப் பார்க்க வேண்டாம். நம் குறைகளை முதலில் பாருங்கள். மற்றவர்களையோ, அல்லது இனங்களையும் அவமதிக்க வேண்டாம். இஸ்லாம் பன்முகத்தன்மையை அடிப்படையாகக் கொண்டது” என்று அவர் கூறினார்.