கொழும்பு: இலங்கையின் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளராக முன்னாள் இலங்கை அதிபரான மஹிந்த ராஜபக்சேயின் தம்பியான கோட்டாபய ராஜபக்சே கடந்த சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
தமது குடும்பம் ஆட்சி அமைக்க முடியாத வகையில் அரசியலமைப்பை தற்கால அரசாங்கம் மாற்றியமைத்ததாக மஹிந்த ராஜபக்சே தெரிவித்தார்.
“எம்மை இனவாதி எனக் கூறினார்கள். நாங்கள் அவ்வாறு கிடையாது. ஆனால், இந்த அரசாங்கம் எந்தவொரு மதத்திற்கும், மார்க்கத்திற்கும் மதிப்பளிக்கவில்லை” என்று அதிபர் தேர்தலுக்கான வேட்பாளரை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியின் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியின் போது, அவர் தமிழிலும் பேசினார்.
“நாட்டின் நிரந்தர சுதந்திரம், சம உரிமையை பெற்றுக் கொடுக்க நாம் முன்னின்று செயற்படுவோம். தமிழ், முஸ்லிம் மக்களை ஏமாற்றாத ஒருவரே எமது வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டும். சட்டத்தை பாதுகாக்கக்கூடிய ஒருவர் வேண்டும். விவசாயத் துறையை மேம்படுத்தக்கூடிய ஒருவர் வேண்டும்” என முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே தமிழ் மொழியில் உரையாற்றினார்.