சிரம்பான் – பத்தாவது நாளாக இன்று செவ்வாய்க்கிழமை தொடர்ந்த தேடுதல் வேட்டையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி முதல் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட நோரா அன் என்ற அயர்லாந்து பெண்ணுடையதுதான் என முதற்கட்ட பரிசோதனைகள் வழி கண்டறியப்பட்டுள்ளது.
நோரா அன்னின் பெற்றோர்களும் அது தங்கள் மகளின் சடலம்தான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
நோரா அன் குடும்பத்தினர் தங்கியிருந்த உல்லாச விடுதியிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில், பந்தாய் குன்றுகள் பகுதியான குனோங் பெரெம்புன் என்ற பகுதியில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.
அது ஒரு வெள்ளைக்காரப் பெண்ணின் சடலம் என முதலில் கூறப்பட்டிருந்தாலும், அது 15 வயதான நோரா அன்னின் சடலம்தான் என தற்போது உறுதியாகியுள்ளது.
ஒரு நீர்வீழ்ச்சிக்கு அருகிலிருந்த பகுதியில் இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டது. இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணியளவில் பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அங்கு சென்ற மீட்புக் குழு சடலத்தைக் கண்டிருக்கிறது.
நேற்று திங்கட்கிழமை, நோராவைக் கண்டு பிடித்து தகவல் தருபவர்களுக்கு 50,000 ரிங்கிட் அன்பளிப்பாக வழங்க உள்ளதாக அவரது தாயார் குறிப்பிட்டிருந்தார்.