Home One Line P1 வேதமூர்த்தி, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் சந்திப்பு

வேதமூர்த்தி, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் சந்திப்பு

1055
0
SHARE
Ad

புதுடில்லி – பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை புதுடில்லியில் சந்தித்தார்.

இந்தியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருக்கும் வேதமூர்த்தி, நேற்று புதன்கிழமை (ஆகஸ்ட் 14) மாலையில் இந்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் இரண்டு தமிழர்களில் ஒருவரான ஜெய்சங்கர் சுப்பிரமணியனை சந்தித்தார். அப்போது, உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவில் கடந்த மே மாதத்தில்  நடைபெற்ற 17-ஆவது பொதுத் தேர்தல் மூலம் இந்தியப் பிரதமராக இரண்டாம் தவணையாக மாபெரும் வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு மலேசிய பிரதமர் துன் மகாதீர் தெரிவித்த வாழ்த்தை பொன்.வேதமூர்த்தி ஜெய்சங்கரிடம் தெரிவித்தார்.

இரு நாட்டு அரசுகளும் தங்களுக்கு இடையிலான வரலாற்றுப்பூர்வ, கலாச்சார உறவை தற்காத்து வரும் வேளையில், தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி மேற்கொண்டுள்ள இந்த அதிகாரபூர்வ பயணம், இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் வணிக ஒத்துழைப்பு, முதலீடு, பாதுகாப்பு, உட்கட்டமைப்பு மேம்பாடு, கல்வி, கலாச்சார பரிமாற்றம், சுற்றுலாத் துறை மேம்பாடு, சுகாதாரம் உட்பட இருநாடுகளின் சமூக-பொருளாதார வளர்ச்சி குறித்தெல்லாம் இந்தச் சந்திப்பின்போது கருத்துப் பரிமாற்றம் செய்யப்பட்டது.

#TamilSchoolmychoice

இந்தியாவுடனான வணிகத்தில் தற்பொழுது 10-ஆவது பெரிய நாடாக மலேசியா விளங்குகிறது. 2018-2019ஆம் ஆண்டு  தவணையில் சுமார் 15 பில்லியன் டாலர் அளவுக்கு இரு நாடுகளுக்கிடையே வணிகப் பரிமாற்றம் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலை மேலும் வலுப்பெறவும் முன்னேற்றம் காணவும் இரு அமைச்சர்களுக்கு இடையே கருத்துப் பரிமாற்றம் இடம் பெற்றதாக இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.