கோலாலம்பூர்: மலேசியர்கள் ஒரு வெளிநாட்டவர் தொடர்பாக ஒருவருக்கொருவர் முரண்படுவது குறித்து முன்னாள் அமைச்சர் ரபிடா அசிஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
உலகம் சாத்தியமான மந்தநிலையை நோக்கிச் செல்லும் இந்நேரத்தில், சாத்தியமான சவால்களை எதிர்கொள்வதில் மலேசியர்கள் ஒன்றுபட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
“நான் ஒன்று மட்டுமே கேட்க விரும்புகிறேன். தனது சொந்த நாட்டால் தேடப்படும் ஒரு வெளிநாட்டவர் காரணமாக மலேசியர்கள் ஏன் ஒருவருக்கொருவர் எதிராகப் போகிறார்கள்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த வாரம் கிளந்தானில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இஸ்லாமிய மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக் சம்பந்தப்பட்ட சர்ச்சைக்கும், அவரை நாடு கடத்துமாறு பல அமைச்சர்களின் பரிந்துரைக்கும் ரபிடா இவ்வாறு கருத்துரைத்தார்.
“மலேசியர்களுக்கு தங்களின் சொந்த பிரச்சினைகள் உள்ளன, அவை நாட்டின் எதிர்காலத்திற்கும் இளைய தலைமுறையினருக்கும் நேரடி பொருத்தத்தைக் கொண்டுள்ளன. மதத்தின் பெயரில் பல வழிகளில் நம் மனதைத் திசை திருப்ப நினைப்போரின் எண்ணத்திற்கு ஏன் இன்னும் வழி விடுகிறோம். புறம்பான, பொருத்தமற்ற விசயங்கள் நம் மனதை மூடிமறைக்க அனுமதிக்கக்கூடாது. மேலும், உண்மையான பிரச்சனைகளிலிருந்து நம் கவனத்தை திசை திருப்ப வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.