Home One Line P1 “மக்கள் அனைவருக்கும் உரியது மலேசியத் திருநாடு” – வேதமூர்த்தி அறைகூவல்

“மக்கள் அனைவருக்கும் உரியது மலேசியத் திருநாடு” – வேதமூர்த்தி அறைகூவல்

1347
0
SHARE
Ad

கோலாலம்பூர்: “ஒரேத் தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் பல வண்ண மலர்களைப் போன்ற மலேசிய மக்கள் அனைவருக்கும் உரியது மலேசியத் திருநாடு” என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி வலியுறுத்தியிருக்கிறார்.

இனம், சமயம் உள்ளிட்ட வரையறைகளை கடந்து பன்முகத்தன்மையும் சமூக உள்ளடக்கமும்தான் நம் அடையாளம். உண்மையில் சபா, சரவாக் மாநில மக்கள் போற்றும் ஒருமைப்பாட்டு நடைமுறையை நாம் கடைபிடிக்க வேண்டும்; அதேவேளை, ஒருசிலர் தங்களை முன்னிலைப் படுத்துவதற்காக தோற்றுவிக்கும் குறுகிய சிந்தனையை நாம் புறந்தள்ள வேண்டும் என்றும் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

“கடந்த ஜூலை 30-ஆம் நாள், மாமன்னர் அரியணையில் அமர்ந்த நிகழ்ச்சியின்போது, குடிமக்களிடையே நிலவும் ஒற்றுமையும் நல்லிணக்கமும் தேச வலிமைக்கான தூண்கள் என்று மாமன்னர் கூறியதை மலேசிய மக்கள் நினைவுகூர வேண்டும். அத்துடன், நாட்டின் நல்லிணக்கப் போக்கை சிதைக்கக்கூடிய பிரச்னைகளை யாரும் தோற்றுவிக்கக்கூடாது” என்றும் மாட்சிமைக்குரிய மாமன்னர் நாட்டு மக்களை கேட்டுக் கொண்டதை அமைச்சர் நினைவுறுத்தினார்.

#TamilSchoolmychoice

சுதந்திர நாள் கொண்டாட்டம் நெருங்கிவரும் நிலையில், நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றுமை உணர்வை இன்னும் மேம்படுத்த வேண்டும். மக்கள் யாவரும் பயன்பெறும் வகையில் நாட்டை வலுப்படுத்தும் முயற்சியில் அனைவரும் ஈடுபட வேண்டும் என்றும் செனட்டருமான பொன்.வேதமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.