Home One Line P1 “ஜாகிர் விவகாரத்தில் பாஸ் கட்சியுடன் சமரசம் கிடையாது” – விக்னேஸ்வரன்

“ஜாகிர் விவகாரத்தில் பாஸ் கட்சியுடன் சமரசம் கிடையாது” – விக்னேஸ்வரன்

898
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அண்மையக் காலமாக சர்ச்சைக்குரிய மத பரப்புரையாளர் ஜாகிர் நாயக் குறித்து நாட்டில் எழுந்திருக்கும் வாதப் பிரதிவாதங்கள் குறித்து இதுவரையில் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் மௌனம் காத்து வருவது பற்றி ஊடகங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.

குறிப்பாக ஜாகிர் நாயக்கிற்கு ஆதரவான நிலைப்பாட்டை பாஸ் எடுத்திருக்கும் நிலையில் மஇகாவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வியும் இயல்பாகவே எழுந்தது.

காரணம், அண்மையக் காலமாக அரசியல் ரீதியாக பாஸ் கட்சியுடன் மஇகா இணைந்து இணக்கமான நல்லுறவை மஇகா பேணி வந்தது. இரு கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்புகளும் நிகழ்ந்தன.

#TamilSchoolmychoice

ஜாகிர் நாயக் குறித்த விவகாரத்தில் விக்னேஸ்வரனின் கருத்துகள் ஊடகங்களில் இன்று வெளியிடப்பட்டிருக்கின்றன.

“ஜாகிர் நாயக் விவகாரத்தில் மற்ற இனங்களையும், மதங்களையும் அவமதிக்கும் அவரது நடவடிக்கையை பாஸ் கண்டித்திருக்க வேண்டும். மாறாக அவருக்கு ஆதரவாக அறிவிப்புகளை விடுத்து வருவதால், அந்தக் கட்சியுடனான உறவை மறுபரிசீலனை செய்யவும், தேவையானால் முறித்துக் கொள்ளவும் மஇகா தயங்காது” என விக்னேஸ்வரன் ஆணித்தரமாக தெரிவித்துள்ளார்.

பாஸ் கட்சியுடனான எங்களின் உறவில் முதல் கட்டப் பேச்சு வார்த்தைகளின்போதே, மத சுதந்திரத்தை மட்டுமின்றி மற்ற மதங்களின் நம்பிக்கைகளையும் மதிப்போம் என்றும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தில் சமரசம் கிடையாது என்றும் பாஸ் தலைவர்கள் உறுதியளித்திருந்தனர் என்பதையும் விக்னேஸ்வரன் சுட்டிக் காட்டினார்.

“ஆனால் இப்போதோ நடப்பது வேறாக இருக்கிறது. இந்திய, சீன சமூகங்களின் உணர்வுகளை மதிக்காது பேசும் ஜாகிர் நாயக்கின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக பாஸ் குரல் கொடுக்கிறது. பாஸ் கட்சியுடனான எங்களின் உறவுக்கான அடித்தளமே மற்ற மதங்களை மதிப்பது, கலாச்சார, பண்பாட்டு, மத நம்பிக்கைகளை எவ்வித சமரசமும் இல்லாமல் மதிப்பது, ஆகியவைதான். ஆனால் இப்போது ஒருவர் தனது மதமான இஸ்லாம் குறித்து பேசினால் எங்களுக்கு எவ்விதப் பிரச்சனையுமில்லை. மாறாக மற்றவர்களின் இனம், மதம் பற்றிப் பேசினால் நாங்கள் பொறுத்துக் கொள்ள முடியாது” என்றும் நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான விக்னேஸ்வரன் வலியுறுத்தியிருக்கிறார்.