Home One Line P1 மலேசிய சீக்கிய இசைக்குழு ஸ்காட்லாந்தில் உலகப் போட்டியில் வாகை சூடியது

மலேசிய சீக்கிய இசைக்குழு ஸ்காட்லாந்தில் உலகப் போட்டியில் வாகை சூடியது

1043
0
SHARE
Ad

கிளாஸ்கோ (ஸ்காட்லாந்து) – சீக்கியர்களின் பங்க்ரா நடனங்களும் அவர்களுக்கென இயங்கும் சொந்த இசைக் குழுக்களும் மலேசியாவில் மிகவும் பிரசித்தம். எந்த ஓர் அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும், மலேசியாவில் திருமணங்கள், பொதுவிழாக்கள் போன்ற வைபவங்களிலும் சீக்கியர்களின் இசையும், நடனமும் இடம் பெறுவது இப்போதெல்லாம் வழக்கமாகி விட்டது.

மலேசியாவில் இயங்கி வரும் அத்தகைய சீக்கிய இசைக்குழுக்களில் ஒன்று ஸ்ரீ தஸ்மேஷ் பைப் பேண்ட் (Sri Dasmesh Pipe Band) நேற்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற உலக அளவிலான ஊதுகுழல் இசைக்குழு போட்டிகளில் (World Pipe Band Championship) கலந்து கொண்டு வெற்றியாளராக முதல் பரிசைத் தட்டிவந்துள்ளது.

அந்தப் போட்டிக்கான வெற்றிக்கிண்ணத்தை ஏந்தும்போது மலேசியக் கொடியையும் உயர்த்திப் பிடித்து நமது நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர் ஸ்ரீ தஸ்மேஷ் பைப் பேண்ட் இசைக்குழுவினர்.

#TamilSchoolmychoice

இந்தப் போட்டிகளுக்காக பல மாதங்கள் தீவிரப் பயிற்சி எடுத்து ஒரே இலக்கோடு உழைத்ததன் காரணமாக இந்த வெற்றி சாத்தியமாகியிருக்கிறது.

கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்தப் போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து 195 இசைக்குழுக்களைச் சேர்ந்த சுமார் 8 ஆயிரம் இசைக் கலைஞர்கள் பங்கு பெற்றனர். 13 நாடுகளைச் சேர்ந்த இசைக்குழுக்கள் இந்தப் போட்டிகளில் பங்கு பெற்றனர். மலேசியாவிலிருந்து பங்கு பெற்ற ஒரே இசைக்குழு ஸ்ரீ தஸ்மேஷ் இசைக்குழுவாகும்.

கிரேட் 4பி (Grade 4B) பிரிவில் முதல் நிலை வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மலேசியக் குழுவினர், அனைத்துக் குழுக்களிலும் முதல் நிலை வெற்றியாளராகவும், சிறந்த வகையில் முரசு இசைப்பது (drumming) பிரிவிலும், சிறந்த அணிவகுப்பு பிரிவிலும் முதல் நிலை வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சீக்கிய குருமார்களின் வரிசையில் பத்தாவது குருவாக வணங்கப்படும் ஸ்ரீ தஸ்மேஷ் பெயரில் இயங்கி வரும் இந்த இசைக்குழு, 1986-ஆம் ஆண்டு சுக்தேவ் சிங் மற்றும் அவரது சகோதரர் ஹர்விண்டர் சிங் ஆகியோரால் தொடங்கப்பட்டதாகும். சுக்தேவ் சிங் ஒரு விமானியாகவும் ஸ்ரீ தஸ்மேஷ் என்ற பெயரில் இயங்கும் அனைத்துலகப் பள்ளியின் இயக்குநரும் ஆவார்.

ஸ்காட்லாந்து நடைபெற்ற இசைக்குழுக்களுக்கான போட்டிகளின் அழகான புகைப்படங்களை இங்கே காணலாம்:

படங்கள்: நன்றி – Sri Dasmesh Pipe Band facebook page