மதுரை – மதிமுக கட்சியின் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோவுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 18) திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, மதுரையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து எதிர்வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதிவரை நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக அவர் நடத்தவிருந்த எதிர்ப்புப் போராட்டம் தொடர்ந்து நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வைகோவைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அண்மைய நாட்களில் தன்னுடன் தம்படம் (செல்பி) எடுக்க விரும்புபவர்கள் 100 ரூபாய் செலுத்தினால்தான் ஒப்புக் கொள்வேன் என நிபந்தனை விதித்து அதனைக் கடுமையாகச் செயல்படுத்தி வருகிறார் வைகோ. இதன் மூலம் தனது கட்சியின் போராட்டங்களுக்கு நிதி திரட்டுவதே தனது நோக்கம் என்றும் வைகோ கூறியிருக்கிறார்.
பணம் கொடுக்க முடியாதவர்களிடம் வைகோ தம்படம் எடுக்க மறுப்பு தெரிவித்தார் என்ற செய்திகளும் அண்மையில் வெளிவந்தன.