கோலாலம்பூர்: சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் இன அரசியல் விளையாட முயற்சிப்பதாக பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்தார்.
மலேசிய சீனர்கள் மற்றும் இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, ஜாகிர் நாயக்கை இந்தியாவிற்கு நாடு கடத்த இயலாது என்று பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.
ஜாகிர் நாயக் வெறும் மதப் போதனைகள் கொடுத்தால் அரசாங்கம் கவலைப்படாது என்று டாக்டர் மகாதீர் கூறினார்.
“வெளிப்படையாக ஜாகிர் மலேசியாவில் இன அரசியலில் ஈடுபட விரும்புகிறார். முதலில், அவருக்கு நிரந்தர குடியுரிமை அந்தஸ்து வழங்கியவர் யார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், நிரந்தர குடியுரிமை அந்தஸ்து உள்ளவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது. அவர் மத விவகாரமாக பிரசங்கிக்கலாம். ஆனால், ஜாகிர் அதைச் செய்யவில்லை. அவர் மலேசியாவின் சீன குடிமக்களை சீனாவுக்கு அனுப்புவது பற்றி பேசுகிறார். அது அரசியல் நடவடிக்கை.” என்று பிரதமர் குறிப்பிட்டார்.
மகாதிர் தாம் யாரையும் சொந்த நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று ஒருபோதும் கூறியதில்லை என்று தெரிவித்தார்.
“இந்நாட்டில் வெவ்வேறு இனங்கள் இருக்கையில், நாம் எவ்வாறு முக்கியமான விவகாரங்களைச் சொல்வது என்பதில் நாம் மிகவும் கவனமாக இருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.
ஜாகிருக்கு எதிராக எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அது சட்டபூர்வமாக இருக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.
கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி கிளந்தானில் நடந்த ஒரு விழாவில் மலாய் தீவுக்கூட்டத்தில் இஸ்லாத்தின் பரவல் குறித்து பேசும்போது ஜாகிர் சர்ச்சைக்குரிய அறிக்கையை வெளியிட்டார்.
முன்னதாக, மலேசிய இந்தியார்கள் பிரதமர் மகாதீர் முகமட்டிற்கு பதிலாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு விசுவாசமாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையில், அவர் மீது நூறுக்கும் மேலான காவல் துறை புகார் அளிக்கப்பட்டது. அப்புகார்களைத் தொடர்ந்து ஜாகிர் நாயக் காவல் துறையினால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.