கோலாலம்பூர்: சுகாதார அமைச்சின் முன்னாள் துணை இயக்குனர் டத்தோஶ்ரீ டாக்டர் ஜெயேந்திரன் சின்னதுரை இன்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 19) அதிகாலை காலமானார்.
38 ஆண்டுகளாக அரசாங்க ஊழியத்தில் பணியாற்றிய டாக்டர் ஜெயேந்திரன், கோலாலம்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு கம்போங் டத்தோ கெராமட்டில் உள்ள அவரது வீட்டில் சரிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது.
டாக்டர் ஜெயேந்திரனின் திடீர் மரணம் பற்றிய செய்தி பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சுகாதார அமைச்சின் இயக்குனர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தனது முகநூல் பக்கத்தில் அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் செய்தியை வெளியிட்டுள்ளார்.
“இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் அன்பானவர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலும் அனுதாபமும். அவர் பலருக்கு ஒரு சிறந்த நண்பராகவும் ஆசிரியராகவும் இருந்தார்” என்று டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.
டாக்டர் ஜெயேந்திரன் கடந்த ஆண்டு மே 13-ஆம் தேதி கோலாலம்பூர் மருத்துவமனை துணை ஆலோசகர் மருத்துவராக இருந்து ஓய்வு பெற்றார்.
துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயில், செய்தி அறிந்ததும் தனது இரங்கலை டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார். பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம், தாம் சுங்கை புலோ சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது வழக்கமான சந்தர்ப்பங்களில் டாக்டர் ஜெயேந்திரன் தனிப்பட்ட முறையில் சந்தித்ததாகத் தெரிவித்துள்ளார்.
அம்னோ பொதுச் செயலாளர் டான்ஸ்ரீ அனுவார் மூசாவும் தனது இரங்கலைத் தெரிவித்தார். முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கும், ஜெயேந்திரன் குடும்பத்தினருக்கும் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
அவரின் இறுதிச் சடங்குகள் புதன்கிழமை (ஆகஸ்ட் 21) நடத்தப்படும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.