Home One Line P1 “காட்” அரேபிய வனப்பெழுத்து பாடத்தைக் கடுமையாக எதிர்க்கிறோம் – கெடா ஜி.குமரன் விளக்கம்

“காட்” அரேபிய வனப்பெழுத்து பாடத்தைக் கடுமையாக எதிர்க்கிறோம் – கெடா ஜி.குமரன் விளக்கம்

2772
0
SHARE
Ad
கோலமுடா – யான் மாவட்ட பெற்றோர் ஆசிரியர் சங்கங்களின் கூட்டம் – நடுவில் அமர்ந்திருப்பவர் ஜி.குமரன்

சுங்கைப்பட்டாணி – கோலா முடா மற்றும் யான் மாவட்ட தமிழ் பள்ளிகளின் 22 பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்கள் தொடக்கப் பள்ளிகளில் அரேபிய வனப்பெழுத்தை அறிமுகப்படுத்தும் கல்வி அமைச்சின் முயற்சிக்கு ஆதரவளித்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி உண்மை நிலைக்குப் புறம்பானது என்றும் அந்தக் கூட்டத்தின் தெளிவான முடிவு ஊடகச் செய்திகள் திரிக்கப்பட்டு விட்டன என்றும் தமிழ் அறவாரியத்தின் கெடா மாநிலப் பொறுப்பாளர் ஜி.குமரன் தெரிவித்துள்ளார்.

கோலா முடா மற்றும் யான் மாவட்ட தமிழ் பள்ளிகளின் 22 பெற்றோர் ஆசிரியர் சங்கங்களின் கூட்டத்தை சுங்கைப் பட்டாணியில் உள்ள தமிழ் அறவாரிய அலுவலகத்தில் ஒருங்கிணைத்து நடத்தியவர் என்ற முறையில் தனது மறுப்பையும், அதற்குரிய விளக்கத்தையும் வழங்குவதாக செல்லியல் ஊடகத்திடம் தொடர்பு கொண்டு குமரன் தெரிவித்தார்.

கோலா முடா மற்றும் யான் மாவட்ட தமிழ் பள்ளிகளின் 22 பெற்றோர் ஆசிரியர் சங்கங்களின் கூட்டத்தில் காட் அரேபிய வனப்பெழுத்து அறிமுகத்தை தாங்கள் ஆதரிப்பதாக இந்த சங்கங்கள் கூறியதாக, உத்துசான் இணைய ஊடகமும், அதைத் தொடர்ந்து மலேசியாகினியும் செய்திகளை வெளியிட்டிருந்தன. அந்த செய்திகளின் அடிப்படையில் செல்லியலும் அந்த செய்தியைப் பதிவேற்றம் செய்திருந்தது.

#TamilSchoolmychoice

“உண்மை நிலை என்னவென்றால் கோலா முடா மற்றும் யான் மாவட்ட தமிழ் பள்ளிகளின் 22 பெற்றோர் ஆசிரியர் சங்கங்களும் காட் அரேபிய வனப்பெழுத்து அறிமுகத்தைக் கடுமையாக எதிர்க்கிறோம். ஒருபோதும் அதற்கு நாங்கள் சம்மதிக்க மாட்டோம். நாங்கள் கூட்டிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்னவென்றால், இந்தப் பாடத்தின் அறிமுகத்தை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பதை பெற்றோர்கள், மற்றும் அந்தந்தப் பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறோம் என்ற கல்வி அமைச்சின் முடிவை வரவேற்கிறோம் என்பதுதான். ஆனால், இதைத் திரித்து அரேபிய வனப்பெழுத்து அறிமுகத்தையே வரவேற்கிறோம் என்பது போன்று உத்துசான் இணைய ஊடகம் செய்தி வெளியிட்டு விட்டது” என்றும் குமரன் செல்லியலிடம் தெரிவித்தார்.

கோலா முடா மற்றும் யான் மாவட்ட தமிழ் பள்ளிகளின் 22 பெற்றோர் ஆசிரியர் சங்கங்களும் ஒருமனதாக காட் அரேபிய வனப்பெழுத்து அறிமுகத்தை அனுமதிக்க மாட்டோம் என்ற முடிவை எடுத்திருப்பதால், நாங்கள் அதை ஆதரிக்கிறோம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் குமரன் வலியுறுத்தினார்.

மேலும், தமிழ் அறவாரியம் இந்த விவகாரம் தொடங்கிய நாள்முதல் காட் அரேபிய வனப்பெழுத்தை எதிர்க்கும் தனது நிலைப்பாட்டில் உறுதியாகவும், ஒரே நிலையோடும் இருந்து வந்திருக்கிறது என்பதையும் குமரன் சுட்டிக் காட்டினார்.