ஜோர்ஜ் டவுன்: இந்தியாவில் பிறந்து தப்பி ஓடி வந்த இஸ்லாமிய மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக்கை அவதூறு வழக்குக்காக நீதிமன்றத்தில் எதிர்கொள்ள தயாராக உள்ளதாக பினாங்கு துணை முதல்வர் பி.ராமசாமி தெரிவித்துள்ளார்.
அந்த அவதூறு வழக்கை தாம் ஏற்பதாகவும், நீதிமன்றத்தில் உண்மை வெளிப்படும் நேரம் வந்துவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
“ஜாகிர் என்ற பட்சத்தில், மன்னிப்பு என்ற சொல், எனது சொற்களஞ்சியத்தில் இல்லை,” என்று அவர் நேற்று திங்கட்கிழமை ஜாகிரின் வழக்கறிஞர்களிடமிருந்து பெற்ற கடிதத்திற்கு பதிலளித்தார்.
“மலேசியாவில் இந்துக்களின் விசுவாசத்தை நாயக் கேள்வி கேட்கக்கூடாது” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையில் போதகருக்கு எதிராக அவர் கூறிய கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்க 48 மணிநேரம் அவகாசம் அளித்ததாக இராமசாமி கூறினார்.
“நான் பல கட்டுரைகளை எழுதியுள்ளேன், ஆனால் அவர் இதனில் மட்டுமே தவறு காண்கிறார். மற்றவைகளுடன் ஒப்பிடும்போது இது மிக மென்மையான தொணியில் அமைந்தது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜசெகாவில் தாம் மேல் வருவதற்கு ஜாகிர் நாயக்கை பயன்படுத்திக் கொள்வதை அவர் நிராகரித்தார்.
“நான் கட்சியில் ஓரங்கட்டப்பட்டேன் என்றும், கட்சியில் ஒரு சிறந்த நிலைக்கு திரும்புவதற்கு நான் ஜாகிர் நாயக்கைப் பயன்படுத்துகிறேன் என்றும் அவர் கூறுகிறார். இது முட்டாள்தனம் மிக்கது. இந்த பிரச்சனைக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் உள்ளது? ” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிராக மட்டுமே ஜாகிர் காவல் துறையில் புகார் அளித்துள்ளதை இராமசாமி சுட்டிக் காட்டினார்.
“அவர் ஏன் முஸ்லிமல்லாதவர்களுக்கு மட்டும் கடிதம் அனுப்புகிறார். நிறைய மலாய்க்காரர்களும் அவரை விமர்சித்தனர். இது தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்கு, அவர் முஸ்லிமல்லாதவர்களை மட்டுமே குறிவைக்கிறார்,” என்று அவர் கூறினார்.
கடிதம் வழங்கப்பட்ட அவர்கள் நால்வரும் டாக்டர் ஜாகிரை நீதிமன்றத்தில் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக இராமசாமி கூறினார்.