கோலாலம்பூர்: முஸ்லிம் அல்லாதவர்களை கோபப்படுத்திய தனது சர்ச்சைக்குரிய உரைக்காக இஸ்லாமிய மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
ஜாகிர் தாம் இனவெறியர் இல்லையென்றும், அவரது அறிக்கை திரித்து விடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
“நான் எப்போதும் அமைதியை ஆதரிக்கிறேன், ஏனென்றால் அதுதான் குர்ஆனின் நிலைப்பாடு. உலகின் மூலைகளுக்கு அமைதியை பரப்புவதே எனது நோக்கம். துரதிர்ஷ்டவசமாக, எனது பணியிலிருந்து என்னைத் தடுக்க முயன்ற விமர்சகர்களையும் நான் சந்தித்தேன், ”என்று அவர் கூறினார்.
நாட்டில் இனப் பிரச்சனைகளை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட சூழலுக்கு வெளியே தனது அறிக்கை மேற்கோள் காட்டப்பட்டுள்ளது என்று அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில் கிளந்தானில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இனப் பிரச்சனையைத் தூண்டும் வகையில் அவரது உரை இருந்ததால், புக்கிட் அமானில் 10 மணி நேரத்திற்கும் மேலாக நேற்று திங்கட்கிழமை ஜாகிர் விசாரிக்கப்பட்டார்.
முஸ்லிமல்லாதவர்களை தம்மை இனவெறியாளன் என்று நினைக்கத் தூண்டியது குறித்து தாம் வருத்தப்படுவதாக ஜாகிர் கூறினார்.