ஜோர்ஜ் டவுன்: இப்போதைக்கு சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகரான ஜாகிர் நாயக்கை, அரசாங்கம் நாடு கடத்தாது என்று பிரதமர் மகாதீர் முகமட் கூறியது இந்த அரசாங்கத்தின் இறுதி முடிவா, இல்லையா என்பது தமக்குத் தெரியவில்லை என்று பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி தெரிவித்தார்.
மேலும், நாட்டில் உள்ள இந்துக்கள் மற்றும் சீனர்களுக்கு எதிரான தேச நிந்தனை உரையின் காரணமாக நாயக்கிற்கு எதிரான காவல் துறையின் விசாரணை முடிந்து விட்டதா என்ற கேள்வியையும் அவர் முன்வைத்துள்ளார்.
ஜாகிரின் சர்ச்சைக்குரிய உரையின் விளைவாக, நாட்டின் பல்வேறு சமூகங்களிடையே வெறுப்பு மற்றும் தவறான உணர்வுகளை உருவாக்கியதற்காக நாயக்கிற்கு எதிராக கிட்டத்தட்ட இருநூறு காவல் துறை புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நாயக்கிற்கு எதிரான மகாதீரின் எந்த நடவடிக்கையும் இல்லாதது, குறிப்பாக புதிய மலேசியாவுக்கு வாக்குறுதியளித்த பிரதமரிடமிருந்து இம்மாதிரியான செயல் ஏமாற்றமளிப்பதாக அவர் தெரிவித்தார்.
“மகாதீரின் தரப்பில் ஏன் செயலற்ற தன்மை உள்ளது என்று எனக்குத் தெரியவில்லை. நடவடிக்கை எடுப்பதற்கு முன்பதாக அவர் காவல் துறையினரிடமிருந்து ஒரு முழு அறிக்கைக்காக காத்திருக்கிறாரா என்பது தற்போதைக்கு தெளிவாகத் தெரியவில்லை.” என்று அவர் தமது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
“நாயக்கின் உரையானது முஸ்லிமல்லாதவர்களின் உணர்வுகளை குறிப்பாக இந்துக்கள் மற்றும் சீனர்களை புண்படுத்தியுள்ளது. ஜாகிர் நாயக்கை நாட்டில் வைத்திருக்க மகாதீரின் முடிவில் நான் மட்டுமல்ல, நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான மலேசியர்களும் ஏமாற்றமடைந்துள்ளனர்.” என்று அவர் தெரிவித்தார்.