Home One Line P1 “ஜாகிர் நாயக் விவகாரத்தில் மக்களை ஏமாற்றுவதை சைட் சாதிக் நிறுத்த வேண்டும்” – இராமசாமி சாடல்

“ஜாகிர் நாயக் விவகாரத்தில் மக்களை ஏமாற்றுவதை சைட் சாதிக் நிறுத்த வேண்டும்” – இராமசாமி சாடல்

1189
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் – இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாதிக், ஜாகிர் நாயக் விவகாரத்தில் மக்களை ஏமாற்றும் போக்கைக் கைவிட வேண்டும் என பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி கடுமையாக சாடியுள்ளார்.

“மகாதீரின் அமைச்சரவையில் சில அமைச்சர்கள், கொள்கை விவகாரங்களில் அப்படியே அந்தர் பல்டியாக திரும்பிவிடுகின்றனர் (யு-டர்ன்) என அடிக்கடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. இது உண்மையா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அண்மையில் நடந்த ஒரு சம்பவம் இது உண்மையாக இருக்கலாம் என்பதை நிரூபிக்க மேற்கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்க்கின்றன. பாஸ் அழைப்பிற்கிணங்க கிளந்தானில் உரையாற்றிய இஸ்லாமிய பரப்புரையாளரும், தனது குற்றங்களில் இருந்து தப்பித்து மறைந்து வாழ்பவருமான ஜாகிர் நாயக்கின் சர்ச்சைக்குரிய பேச்சுகளைத் தொடர்ந்து அவரை இந்தியாவுக்கே நாடு கடத்த வேண்டும் என அறைகூவல் விடுத்த ஒரு சில அமைச்சர்களில் ஒருவர் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சரான சைட் சாதிக் ஆவார். மலேசியாவிலுள்ள தனது பெரிய குடும்பத்தின் ஒரு பகுதியினரான இந்துக்கள் மற்றும் சீனர்களின் நாட்டுப் பற்று பற்றி ஜாகிர் கேள்வி எழுப்புவதைத் தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று சைட் சாதிக் அப்போது கூறினார். ஆனால், அடுத்த சில நாட்களில் ஜாகிர் நாயக்கோடு இரவு உணவு உண்டு விட்டு, தனது முந்தைய நிலைப்பாட்டை அப்படியே தலைகீழாக மாற்றிக் கொண்டு விட்டார், அமைச்சரவையின் மிக இளவயது அமைச்சரான சைட் சாதிக்” என தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் கட்டுரையில் இராமசாமி சாடியுள்ளார்.

தனது தவறுக்கு நாயக் மன்னிப்பு கேட்டு விட்டதால், நாம் இதைவிட்டு விட்டு மலேசியர்களைப் பாதிக்கும் மற்ற விவகாரங்களுக்கு செல்வோம் எனவும் சைட் சாதிக் கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

“360 பாகை சுற்றுவட்டத்திற்கு ஒரேயடியாக அந்தர்பல்டி அடித்து நிலைப்பாட்டை மாற்றியிருக்கும் சைட் சாதிக் பல மலேசியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார். எப்படி ஓர் அமைச்சர் இவ்வளவு சீக்கிரமாக தனக்கு விருப்பமான முறையில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வார் என்ற யோசனையில் இருக்கிறார்கள், அந்த மலேசியர்கள். ஆனால், நாயக் உண்மையிலேயே மனப்பூர்வமாக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தால் சைட் சாதிக் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதற்கான சரியான காரணம் கிடைத்திருக்கக் கூடும். ஆனால் இந்த மன்னிப்புக்குப் பின்னால் உள்ள அம்சங்கள் பற்றி சைட் சாதிக் தெரிந்திருக்க வேண்டும்” என்றும் தனது பதிவில் இராமசாமி தெரிவித்திருக்கிறார்.

“நாயக் தனது உணர்ச்சையைத் தூண்டும் சர்ச்சைக்குரிய பேச்சின் வழி இந்துக்கள் மற்றும் சீனர்களின் உணர்வுகளை அவமதித்ததற்காகவோ, காயப்படுத்தியதற்காகவோ மன்னிப்பு கோரவில்லை. மாறாக, அவர் மன்னிப்பு கோரியது யாரிடம் என்றால், தனது உரையை முழுமையாக விளங்கிக் கொள்ளாமல் தவறுதலாகப் புரிந்து கொண்டவர்களிடம்தான். எனவே, நாயக் கேட்டது எந்த மாதிரியான மன்னிப்பு?” என சைட் சாதிக்கை நோக்கி இராமசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

“நாயக் மன்னிப்பு கேட்டார் என்பதையும், அது உண்மையானது என்பதையும் நீங்கள் நம்புகிறீர்களா?” என்றும் சைட் சாதிக்கிடம் இராமசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

அபாயகரமான, தேசநிந்தனைக்குரிய தனது கிளந்தான் உரையைத் தொடர்ந்து அதிலிருந்து தப்பிக்கும் விதமாகவும், அதன் தாக்கத்தைக் குறைக்கும் விதமாகவும்தான் நாயக் பொய்மையான அல்லது மனப்பூர்வமாக இல்லாத ஒரு மன்னிப்பை வெளியிட்டார் என்பது சைட் சாதிக்குக்கும் மற்றவர்களுக்கும் தெளிவாகத் தெரியும் என்றும் இராமசாமி குறிப்பிட்டார்.

காவல் துறையினர் தங்களின் புலனாய்வுகளை முடிக்கும் முன்னரே தற்போதைக்கு நாயக் நாட்டிலேயே தங்கியிருக்கலாம் என முடிவு செய்து விட்டார் பிரதமர் துன் மகாதீர் என்றும் தெரிவித்திருக்கும் இராமசாமி, “இறுதியில் நாயக் விவகாரத்தில் சைட் சாதிக் என்ன நிலைப்பாடு எடுக்கிறார் என்பது முக்கியமில்லை. ஆனால் அந்த நிலைப்பாடு குறைந்த பட்சம் முரண்பாடற்றதாக, ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். மக்களை ஏமாற்றும் விளையாட்டு வேண்டாம்!” எனவும் இராமசாமி தனது பதிவில் தெரிவித்திருக்கிறார்.