கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் எதிர் கொள்ளும் 1எம்டிபி வழக்கு விசாரணைக் குழுவை வழிநடத்துவதிலிருந்து முன்னாள் வழக்கறிஞர் கோபால் ஸ்ரீ ராமை தகுதி நீக்கம் செய்ய நீதிமன்றத்தில் விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் மூன்று பேர் கொண்ட குழு இன்று திங்கட்கிழமை ஒருமனதாக, கோபால் ஶ்ரீ ராமை அரசாங்க துணை வழக்கறிஞராக நியமிக்கப்படுவதை வாதிடுவதற்கு நஜிப்புக்கு நீதித்துறையில் மறுஆய்வைத் தொடர அனுமதி வழங்கப்பட்டது.
1எம்டிபி நிதியில் 2.28 ரிங்கிட் பில்லியன் சம்பந்தப்பட்ட ஊழல் மற்றும் பண மோசடி குற்றச்சாட்டுகளின் பேரில் நஜிப்பின் விசாரணையில் அரசு தரப்பு குழுவை வழிநடத்த கோபால் ஶ்ரீ ராமை அரசாங்கம் நியமித்திருந்தது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் கீழ் நான்கு குற்றச்சாட்டுகளும் மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டம், பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் தடுப்பு மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் 21 குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.