Home One Line P1 நஜிப் மீதான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கு – அரசு தரப்பு வாதங்கள் நிறைவடைகின்றன

நஜிப் மீதான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கு – அரசு தரப்பு வாதங்கள் நிறைவடைகின்றன

717
0
SHARE
Ad

கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் மீதான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் சென்டிரியான் நிறுவனம் தொடர்பான 42 மில்லியன் ரிங்கிட் ஊழல் வழக்கு இன்றுடன் 58 நாட்களைக் கடந்திருக்கிறது.

பல்வேறு வாதங்களையும், சாட்சிகளின் வாக்கு மூலங்களையும் முன்வைத்த அரசு தரப்பு இன்றுடன் தனது தரப்பு வாதங்களை நிறைவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து நஜிப் மீது தொடர்ந்து குற்ற விசாரணை நடத்த முறையான வழக்கொன்றை அரசு தரப்பு சமர்ப்பித்திருக்கிறதா என்பதை நீதிபதி முடிவு செய்வார்.

#TamilSchoolmychoice

அவ்வாறு நஜிப் குற்றம் இழைத்திருப்பது அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டிருந்தால் அவர் எதிர்வாதம் செய்ய அழைக்கப்படுவார்.

நஜிப்பின் எதிர்வாத வழக்கு முடிந்தவுடன் அவர் குற்றவாளியா இல்லையா என்ற தீர்ப்பை நீதிபதி எடுப்பார். அதற்கு மேலும் சில வாரங்கள் அல்லது மாதங்கள் கூட எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது உயர்நீதிமன்ற வழக்கு என்பதால், தீர்ப்பு நஜிப்புக்கு எதிரானதாக அமைந்தாலும், அதைத் தொடர்ந்து மேல்முறையீட்டு நீதிமன்றம், கூட்டரசு நீதிமன்றம் என மேல்முறையீடுகள் தொடரப்பட்டு இறுதித் தீர்ப்பு கிடைக்க மேலும் ஓராண்டு ஆகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகார விதிமீறல், நம்பிக்கை மோசடி, 3 கள்ளப் பணப் பரிமாற்றம் ஆகிய பிரிவுகளில் 7 குற்றச்சாட்டுகளை எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கில் நஜிப் எதிர்நோக்குகிறார்.

இதற்கிடையில், நஜிப் மீதான 2.28 பில்லியன் ரிங்கிட் 1எம்டிபி வழக்கு நாளை புதன்கிழமை ஆகஸ்ட் 28-ஆம் தேதி கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கோலின் லாரன்ஸ் செகுயிரா முன்னிலையில் தொடங்குகிறது.