கோலாலம்பூர்: மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டிடமிருந்து விமான நிறுவனங்கள் இழப்பீடு கோரும் சூழல் ஏற்படுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய கணினி முறை இடையூறுகள் மற்றும் தாமதங்களுக்குப் பிறகு விமான நிறுவனங்கள் பல மில்லியன் ரிங்கிட்டை இழக்க நேரிட்டுள்ளது.
பெயர் குறிப்பிட மறுத்த ஒரு விமான நிறுவனத்தின் தலைமை நிருவாக அதிகாரி, நான்கு நாட்களில் தனது விமான சேவைக்கான செலவு 6 மில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளதாகவும், மற்றொரு விமான நிறுவனம் 10 மில்லியனுக்கும் மேல் இழப்புகளைக் கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சில பயணிகள் தங்கள் விமானங்களை இரத்து செய்ததோடு பணத்தைத் திரும்பப் பெறவும் கேட்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
2012- 2014-ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட வேண்டிய பழைய கணினி முறையை மேம்படுத்த தவறியதால் இது நடந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பல கோரிக்கைகள் அது தொடர்பாக இருந்தபோதிலும் ஒப்புதல் பெறப்படவில்லை என்று கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு மேம்படுத்தலுக்கான விலை 50 மில்லியன் ரிங்கிட் என்றும், தற்போது அதன் செலவுத் தொகை அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.