கோலாலம்பூர்: டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் சம்பந்தப்பட்ட 1எம்டிபி வழக்கு விசாரணை இன்று புதன்கிழமை தொடங்கியது. வழக்கறிஞர்கள் ஆறு சாட்சிகளை அழைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கு காலை 10.00 மணியளவில் உயர்நீதிமன்ற நீதிபதி கொலின் லாரன்ஸ் செக்வேரா முன்னிலையில் தொடங்கியது.
இன்று நடைபெறும் விசாரணையில், மூத்த மத்திய அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி டத்தோஶ்ரீ கோபால் ஸ்ரீராம் வழக்கினை தொடக்கி வைப்பார் என்று துணை அரசு வழக்கறிஞர் அகமட் அக்ராம் கூறினார்.மலேசிய நாடாளுமன்றத்தின் நாடாளுமன்ற விவகாரப் பிரிவின் நிருவாக அதிகாரி மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் இன்று சாட்சியமளிக்க அழைக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.
அகமட் அக்ராம் மூன்று சாட்சிகளை விசாரிப்பதாகவும், மற்றொரு அரசு தரப்பு வழக்கறிஞர் மற்ற சாட்சிகளை விசாரிப்பதாகவும் அவர் கூறினார்.
1எம்டிபி நிதியிலிருந்து 2.3 பில்லியன் ரிங்கிட்டை பெறுவதற்கு நஜிப் தனது பதவியைப் பயன்படுத்தி நான்கு குற்றச்சாட்டுகளையும், அதே தொகையை உள்ளடக்கிய 21 பண மோசடி குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்கிறார்.