கோலாலம்பூர் – நாளை ஆகஸ்ட் 31-ஆம் நாள் சனிக்கிழமை கொண்டாடப்படும் சுதந்திர தினத்திற்கு முதல் நாள் இரவு இன்று வெள்ளிக்கிழமை தலைநகரின் அடையாளமாகத் திகழும் பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுர வளாகம் கோலாகலத் திருவிழா காணவிருக்கிறது. இன்று இரவு 9.00 மணி தொடங்கி கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெறும் கொண்டாட்டத்தின் உச்ச கட்டமாக நள்ளிரவுக்கு முன்பாக கண்கவர் வாண வேடிக்கைகள் நடத்தப்படும்.
62-வது சுதந்திரத் தினக் கொண்டாட்டம் என்பது ஒருபுறமிருக்க, பெட்ரோனாஸ் கேஎல்சிசி இரட்டைக் கோபுரம் நிர்மாணிக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்திருப்பதை முன்னிட்டும் இந்தக் கோலாகலக் கொண்டாட்டங்கள் களைகட்டவிருக்கின்றன.
நடனமாடும் நீரூற்றுகளிலும் சில புதுமைகள் புகுத்தப்பட்டு காண்பவர்களுக்கு ஆச்சரியமும், புதிய அனுபவமும் கிடைக்கும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
அதிலும் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இரட்டைக் கோபுரத்தைத் திட்டமிட்டு நிர்மாணித்த அதே துன் மகாதீர்தான் இப்போதும் பிரதமராக இருக்கிறார் என்பது இந்த ஆண்டு சுதந்திர தின மற்றும் இரட்டைக் கோபுரத்தின் 20-ஆம் ஆண்டு நிறைவு விழாக கொண்டாட்டங்களின் சிறப்பம்சங்களாகும்.