Home One Line P0 ஜாகிர் நாயக் விவகாரம்: இண்டர்போல் தலைவரைச் சந்தித்தார் அமித் ஷா

ஜாகிர் நாயக் விவகாரம்: இண்டர்போல் தலைவரைச் சந்தித்தார் அமித் ஷா

1669
0
SHARE
Ad

புதுடில்லி – தற்போது இந்தியாவுக்கு வருகை தந்திருக்கும் இண்டர்போல் எனப்படும் அனைத்துலகக் காவல் துறையின் தலைவர் ஜர்கன் ஸ்டோக், பல்வேறு அரசு அதிகாரிகளைச் சந்தித்ததோடு, நேற்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்துப் பேசினார்.

அந்தச் சந்திப்பின்போது, மலேசியாவில் அடைக்கலம் புகுந்திருக்கும் ஜாகிர் நாயக் போன்று பயங்கரவாதக் குற்றம் சாட்டப்பட்டு, தேடப்படும் நபர்கள் மீது சிவப்பு எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்படுவதில் இண்டர்போல் தாமதம் செய்வது குறித்து அமித் ஷா, ஜர்கன் ஸ்டோக்கிடம் சுட்டிக் காட்டினார்.

மேலும், போதைப் பொருள் கடத்தல், அனைத்துலக பயங்கரவாதம், கள்ளப் பணப் பரிமாற்றம், போன்ற விவகாரங்களில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்றும் விட்டுக் கொடுக்காத போக்கை எடுத்திருப்பது குறித்தும் இண்டர்போல் தலைவரிடம் விளக்கிய அமித் ஷா, இதுபோன்ற விவகாரங்களில் இண்டர்போல் அமைப்புக்கு நீண்ட காலத்திற்கான தூரநோக்கு வியூகத் திட்டங்கள் தேவை என்ற கோரிக்கையும் விடுத்தார்.

#TamilSchoolmychoice

இண்டர்போல் தலைவருடனான அமித் ஷாவின் சந்திப்பைத் தொடர்ந்து, இந்திய உள்துறை விடுத்த அறிக்கையில் தேடப்படும் குற்றவாளிகள் தொடர்பான சிவப்பு அறிவிப்புகள் உடனடியாக பதிவு செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் இண்டர்போல் தலைவரிடம் வலியுறுத்தினார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இண்டர்போல் அத்தகைய அம்சங்களில் வழங்கும் ஒத்துழைப்பின் மூலம் மறைந்து வாழும் பொருளாதாரக் குற்றவாளிகளையும், பயங்கரவாதத் தொடர்புடையவர்களையும் இந்தியா தேடிக் கண்டுபிடிக்க உதவியாக இருக்கும் என்றும் அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டுள்ளது.

இண்டர்போல் அமைப்பின் சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு என்பது அனைத்துலக கைது ஆணைக்கு ஒப்பானதாகும். இதனைக் கொண்டிருக்கும் தேடப்படும் குற்றவாளிகளை இண்டர்போல் உறுப்பிய நாடுகள் உடனடியாக கைது செய்து தடுப்புக் காவலில் வைக்க முடியும்.

இண்டர்போல் அமைப்பில் மலேசியாவும், இந்தியாவும் உறுப்பிய நாடுகளாகும்.