புத்ராஜெயா – பேரங்காடிகள் மூலம் நாட்டு மக்களிடையே ஒற்றுமையை இன்னும் வலுப்படுத்த அரசு எண்ணம் கொண்டுள்ளது என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
எல்லா இன மக்களும் சந்திக்கும் இடமாக நாட்டிலுள்ள பேரங்காடிகள்தான் விளங்குகின்றன. ஏறக்குறைய 70 விழுக்காட்டு மக்கள் அனைத்து தரப்பில் இருந்தும் வந்து சந்திக்கின்ற முனையங்களாக இந்த பல்நோக்கு விற்பனை மையங்கள் இருப்பதால், இதைப் பயன்படுத்திக் கொள்ள அரசு விரும்புகிறது. பொது மக்களிடையே ஒருங்கிணைப்பையும் ஒற்றுமை உணர்வையும் இன்னும் மேம்படுத்த பேரங்காடிகளுடன் ஒத்துழைக்க விரும்புகிறோம் என்று புத்ராஜெயா ‘ஐஓஐ சிட்டி’ பேரங்காடியில் ஒற்றுமை வாரத்தைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 1-ஆம் தேதி தொடக்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி கருத்துரைத்தார்.
இது ஒரு பரிந்துரை அல்லது முன்னெடுப்புதான் என்று சொன்ன அமைச்சர், புத்ராஜெயா ‘ஐஓஐ சிட்டி’ பேரங்காடி, அரசாங்க ஒத்துழைப்புடன் செயல்படுகிறது என்பதையும் எடுத்துரைத்தார்.
இதன் தொடர்பில், நாட்டில் உள்ள முக்கியமான பேரங்காடிகளுடன் கருத்துப் பரிமாற்றம் செய்யப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.