விளாடிவோஸ்டோக் – இரஷியாவின் விளாடிவோஸ்டோக் நகரில் நடைபெற்ற கிழக்கு நாடுகளுக்கான பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் நமது பிரதமர் துன் மகாதீரை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் சந்தித்து உரையாடினார்.
வழக்கமாக பல மொழிகளிலும் தனது கருத்துகளை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்வது மோடியின் வழக்கம். அதே போன்று மகாதீரின் சந்திப்புக்குப் பின்னர் அதுகுறித்து மலாய் மொழியிலேயே மோடி தனது பதிவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
“மலேசியப் பிரதமர் துன் டாக்டர் மகாதீருடன் சிறந்த ஒரு சந்திப்பை நடத்தினேன். இருநாடுகளுக்கும் இடையிலான இருவழி நல்லுறவு குறித்தும் இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புகள் குறித்தும் கலந்துரையாடினோம்” என மலாய் மொழியிலேயே மோடி பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையில் மோடி – மகாதீர் இடையிலான சந்திப்பின்போது சர்ச்சைக்குரிய மத பரப்புரையாளர் ஜாகிர் நாயக்கை இந்தியாவுக்கு நாடு கடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.