பெங்களூரு – இந்தியாவின் சந்திராயன் 2 திட்டம் முழுமையாக வெற்றியடைய சில நிமிடங்களே இருந்த நிலையில் நிலவில் தரையிறங்கவிருந்த விக்ரம் இயந்திரப் பொறியுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து பெங்களூருவில் இயங்கும் இஸ்ரோ கட்டுப்பாட்டு நிலையத்தை சோகமும், கண்ணீர்க் காட்சிகளும் சூழ்ந்தன.
எனினும், இன்று சனிக்கிழமை காலை 8.00 மணியளவில் இஸ்ரோ கட்டுப் பாட்டு நிலையத்திலிருந்து அனைத்து விஞ்ஞானிகளின் முன்னிலையில் உரையாற்றிய நரேந்திர மோடி அவர்களுக்கு ஆறுதலும், உற்சாகமும் தரும் வார்த்தைகளை தனதுரையில் வழங்கினார்.
இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடும் உழைப்பையும், அவர்களது அர்ப்பண உணர்வையும் பாராட்டிய மோடி, அவர்கள் நேரம் காலம் பார்க்காது உழைப்பதற்கு ஒத்துழைக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் பாராட்டுகளை வழங்கினார்.
“நாம் மாபெரும் சாதனையைச் செய்திருக்கிறோம். உங்கள் அனைவரையும் இந்தியா பெருமையுடன் பார்க்கிறது. உங்களின் உழைப்புக்கான சிறந்த பலன்கள் இனிமேல்தான் நமக்குக் கிடைக்கப் போகின்றன. எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்” என்றும் மோடி கூறினார்.
மோடியின் உரையை அனைத்து ஊடகங்களும் நேரலையாக இந்திய பொதுமக்களுக்கு ஒலி, ஒளிபரப்பின.
பின்னர், இஸ்ரோவின் அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் அலுவலர்களுடன் தனித்தனியாக கைகுலுக்கி அவர்களுக்குப் பாராட்டு தெரிவித்த பின் மோடி அங்கிருந்து வெளியேறினார்.
மோடி வெளியேறியபோது, கார்வரை வந்து அவரை வழியனுப்பி வைத்த இஸ்ரோ தலைவர் சிவனைக் கட்டியணைத்து மோடி தோளில் தட்டிக் கொடுத்தார். கண்ணீர் விட்டு கலங்கி அழுத சிவனை இறுகக் கட்டியணைத்தவாறு அவரது காதில் ஆறுதல் வார்த்தைகளைக் கூறினார் மோடி.
பின்னர் அங்கிருந்து மோடி புறப்பட்டுச் சென்றார்.
இதற்கிடையில் இந்தியாவின் அனைத்து அரசியல் கட்சிகளும், தரப்புகளும் இஸ்ரோவுக்கு பாராட்டுகளைக் குவித்தன. இது தோல்வியல்ல, மாறாக, இதுவரை நாம் சாதித்ததே மாபெரும் வெற்றிதான் என பலரும் கருத்து தெரிவித்தனர்.
நிலவைச் சுற்றி வரும் விண்கலத்திலிருந்து பெறப்பட்ட தரவுகளை இஸ்ரோ தொடர்ந்து ஆராய்ந்து வரும் என்றும் இஸ்ரோ சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.