Home One Line P2 சென்னை – விளாடிவோஸ்டோக் நகர்களுக்கிடையில் கடல் போக்குவரத்து சேவை

சென்னை – விளாடிவோஸ்டோக் நகர்களுக்கிடையில் கடல் போக்குவரத்து சேவை

1185
0
SHARE
Ad
விளாடிவோஸ்டோக் துறைமுக மேம்பாடு குறித்து மோடி-புடினுக்கு விளக்கம் வழங்கப்படுகிறது

சென்னை – கடல் வழி போக்குவரத்தில் இந்தியாவின் முன்னணி துறைமுக நகராகத் திகழ்ந்து வரும் சென்னைக்கு இன்னொரு வகையில் அதன் துறைமுக வணிக வாய்ப்புகள் பெருகுவதற்கான வாய்ப்பு பிரதமர் நரேந்திர மோடியின் இரஷிய வருகையைத் தொடர்ந்து நிகழ்ந்துள்ளது.

வழக்கமாக இரஷியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடந்து வந்த கடல் வழிப் போக்குவரத்துகள் இந்தியாவின் மும்பை துறைமுகம் வழியாகத்தான் நடந்து வந்தது. ஆனால் இதற்கான கடல்வழி தூரம் ஏறத்தாழ 8,500 கடல்மைல்கள் (nautical miles) ஆகும். ஆனால், இரஷியாவின் விளாடிவோஸ்டோக் துறைமுக நகருக்கும் சென்னைக்கும் இடையிலான கடல் வழி தூரம் 5,600 கடல் மைல்கள்தான்.

இதன் காரணமாக இந்தக் கடல்வழியைப் பயன்படுத்தினால் கப்பல்களுக்கு எரிபொருள் செலவு உட்பட கணிசமான செலவினங்கள் குறையும் என்பதோடு, கடல் போக்குவரத்துக்கான கட்டணங்களும் பெருமளவு குறையும்.

#TamilSchoolmychoice

சரி! ஏன் இந்த விளாடிவோஸ்டோக் நகர் தேர்ந்தெடுக்கப்பட்டது?

பல சுவாரசியங்களைக் கொண்டது இந்த விளாடிவோஸ்டோக் நகர்.

இரஷியாவின் கிழக்குப் பகுதிகள் நீண்டகாலமாகப் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளாக இருந்து வந்தன. ஆனால் தற்போது இந்தக் கிழக்குப் பிரதேசங்களை மேம்படுத்த இரஷியா முனைந்துள்ளது.

அதன் காரணமாகவே, விளாடிவோஸ்டோக் நகரில் 5-வது கிழக்கு நாடுகளுக்கான பொருளாதார மாநாட்டைத் தற்போது இரஷியா நடத்த, அதில் மலேசியா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளின் பிரதமர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.

சரி, விளாடிவோஸ்டோக் நகரின் சுவாரசியங்களுக்கு வருவோம்.

இரஷியாவின் தலைநகர் மாஸ்கோவிலிருந்து 6,416 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் துறைமுக நகர்தான் விளாடிவோஸ்டோக். ஆனால்,  சுமார் 160 கிலோ மீட்டர் தூரத்தில்தான் வட கொரியாவில் எல்லை வருகிறது.

இன்னொரு புறத்தில் சீனாவுடனான எல்லைப் புறத்தைக் கொண்டிருக்கிறது விளாடிவோஸ்டோக் வட்டாரம். இங்கிருந்து கார் பயணத்தின் மூலம் சீனாவின் எல்லைப் பகுதியை அடைந்து அந்நாட்டுக்குள் சென்றுவிட முடியும்.

கடல்வழியாக சென்றால் ஜப்பான் இன்னொரு அண்டை நாடாக அமைந்திருக்கிறது. இரஷியாவின் சில நகர்களை விட அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலம் விளாடிவோஸ்டோக் நகருக்கு மிக அருகாமையில் இருக்கிறது.

இவ்வாறு பூகோள ரீதியாக பல்வேறு வசதிகளைக் கொண்டிருக்கும் விளாடிவோஸ்டோக் நகர் துறைமுக ரீதியாகவும், வணிக ரீதியாகவும் மிக விரைவாக வளர்ச்சி பெற வாய்ப்புகள் அதிகம்.

அதனால்தான், நமது பிரதமர் துன் மகாதீர் முகமதுவும் இரஷியாவின் கிழக்குப் பகுதிகள் மேம்படுத்தப்படுவது மலேசியாவின் வணிக வாய்ப்புகளை மேலும் விரிவாக்கும் எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

அதனால்தான், இந்தியாவின் சென்னை நகரைக் குறிப்பாகத் தேர்ந்தெடுத்து அந்நகருடன்தான் இரஷியாவின் கடல்வழிப் போக்குவரத்து மேம்படுத்தப்பட வேண்டும் என இரஷியா வற்புறுத்தியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆக, விளாடிவோஸ்டோக் நகருக்கும் சென்னைக்கும் இடையிலான புதிய கடல்வழிப் போக்குவரத்துகள் இனி புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்கும் என நம்பலாம்.

-செல்லியல் தொகுப்பு