சனிக்கிழமை இரவு தலைநகரில் நடைபெற்ற கோலாலம்பூர், சிலாங்கூர் இந்திய வர்த்தக மற்றும் தொழிலியல் சம்மேளனத்தின் (Kuala Lumpur Selangor Indian Chamber of Commerce and Industry) 90-வது ஆண்டு நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அன்வார் இப்ராகிம் இவ்வாறு கூறினார்.
கடந்த காலத் திட்டங்கள் தோல்வியில் முடிந்திருப்பது தெளிவாகத் தெரிவதால், அதன் காரணமாக நாட்டில் மலாய்க்காரர்களிடையே இன்னும் அதிக அளவில் ஏழ்மை நிலை இருப்பதாலும், அரசாங்கத்தின் பொருளாதாரத் திட்டமிடல் பிரிவு இதை உணர்ந்து மாற்றுத் திட்டங்களை அமுலாக்க வேண்டும் எனவும் அவர் அறைகூவல் விடுத்தார்.
பொருளாதாரத் திட்டமிடல் பிரிவின் அமைச்சராக டத்தோஸ்ரீ அஸ்மின் அலி இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதத்தில் ஐக்கிய நாடுகள் மன்றத்தைச் சேர்ந்த பேராசிரியர் அல்ஸ்டன் வழங்கிய ஆய்வறிக்கையில் மலேசியாவின் ஏழ்மை நிலை மோசமாக இருப்பதை அவர் குறிப்பிட்டிருப்பதையும் அன்வார் சுட்டிக் காட்டினார்.
உதாரணமாக, போர்ட்டிக்சனில், மலாய் கம்பங்கள், இந்தியர் வாழும் தோட்டங்கள், சீனர்களின் மீன்பிடிக் கிராமங்கள், பூர்வகுடி குடியிருப்புகள் என எங்கு சென்றாலும் ஏழ்மை நிலை மிக மோசமாக இருப்பதைக் கண்டதாகவும் அன்வார் கூறினார். அன்வார் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமாவார்.
சீன, இந்தியர் சங்கங்களும் இனி இன ரீதியான மேம்பாட்டுத் திட்டங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், அனைத்து இனங்களையும் உள்ளடக்கிய திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட அன்வார், மலாய் இனத்தினரும் தங்களின் மனப்போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.