Home One Line P1 இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க பன்னாட்டு நிறுவனங்களுடன் வேதமூர்த்தி சந்திப்பு

இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க பன்னாட்டு நிறுவனங்களுடன் வேதமூர்த்தி சந்திப்பு

1319
0
SHARE
Ad
வேதமூர்த்தியுடன் மித்ரா துணைத் தலைமை இயக்குநர் மகாலிங்கம்

சைபர்ஜெயா – வேலைவாய்ப்பு சந்தையும் வாழ்க்கைச் சூழலும் அதிவேகமாக மாற்றம் கண்டுவரும் தற்போதைய சூழ்நிலையில் மலேசிய இந்திய இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை தொழில் நுட்பத் துறை நிறுவனங்களில் எவ்வாறு கூடுதலாக அதிகரிக்கலாம் என்பது குறித்து விவாதிக்கும் நோக்கில் பன்னாட்டு நிறுவனங்களுடன் மித்ரா இன்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 10) பிற்பகலில் ஏற்பாடு செய்த வட்டமேசைக் கலந்துரையாடல் கூட்டத்திற்குத் தலைமை ஏற்ற பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி சுமார் இரண்டு மணி நேரம் அந்தச் சந்திப்பில் கலந்து கொண்டு பல அனைத்துலக நிறுவனங்களின் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துகளைக் கேட்டறிந்தார்.

அடுத்த கட்ட தொழில் நுட்ப வளர்ச்சியாகப் பார்க்கப்படும் ‘தொழில் துறை 4.0’ காலகட்டத்தில் இந்திய மாணவர்கள் எத்தகைய கல்வியைப் பெறுவது சிறப்பானதாக இருக்கும்,  கல்வியை முடித்த இந்திய இளைஞர்கள் எத்தகைய துறைகளில் மேற்படிப்பைத் தொடர்ந்து பெறலாம், எத்தகையத் துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பெறலாம் என்பது குறித்து தகவல் தொழில்நுட்பத் துறைகளில் உயர் பதவிகளை வகிக்கும் அனுபவம் வகிக்கும் அதிகாரிகளின் கருத்துகளை இந்த வட்டமேசைக் கலந்துரையாடல் மூலம் வேதமூர்த்தி நேரடியாகக் கேட்டறிந்தார்.

இந்த வட்டமேசைக் கலந்துரையாடலை மித்ராவின் துணைத் தலைமை இயக்குநர் மகாதேவன் முன்னின்று நடத்தினார்.

#TamilSchoolmychoice

தகவல் தொழில்நுட்பத் துறையில் உயர்க்கல்வி பெறும் மாணவர்கள்கூட, நான்கு ஆண்டுகள் கழித்து பட்டம் பெற்று வெளி உலகில் வரும்பொழுது, நடைமுறையில் உள்ள தொழில்நுட்பம் இன்னும் வேகமாக வளர்ந்து விடுகிறது. அந்த மாணவர்கள் தேர்ந்தெடுத்துப் படித்த தொழில்நுட்பம் பயனற்றதாகவோ, அல்லது வேலைவாய்ப்பைப் பெற்றுத் தர முடியாத நிலைமையோ ஏற்பட்டு வருகிறது.

இதுபோன்ற சூழலை எதிர்கொள்ளும் மாணவர்களைத் தயார்ப் படுத்தவும் பொதுவாக உலகளாவிய வேலைவாய்ப்பு சந்தையை எதிர்கொள்வதற்கு ஏதுவாக உயர்க்கல்வி மாணவர்களைத் தயார்ப்படுத்தவும் அமேசோன் (AMAZON), மைக்ரோசாப்ட் (Microsoft), டெல் கணினி நிறுவனம் (DELL), சிஸ்கோ சிஸ்டம் (CISCO SYSTEM), இந்தியாவின் டாடா நிறுவனம் (TATA), கேபிஎம்ஜி (KPMG), பிரைஸ் வாட்டர்ஹவுஸ் (Price Waterhouse) போன்ற பல பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்தக் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இத்தகைய பன்னாட்டு நிறுவனங்களுடன் மித்ரா உடன்பாடு கண்டு வருவதாகவும் சைபர் ஜெயாவில் உள்ள, சைபர் வியூ தங்கும் விடுதியில் நடைபெற்ற வட்டமேசைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி கூறினார்.

பள்ளிக் கல்வியை இடையில் நிறுத்திவிட்ட மாணவர்களுக்கான எதிர்காலம், அவர்களுக்குரிய வேலை வாய்ப்பு பற்றியும் ஆலோசிக்கப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். குறிப்பாக பி-40 எனப்படும் குறைந்த வருமானம் பெறுவோரின் பிள்ளைகளுக்கு எவ்வாறு தொழில்நுட்பக் கல்வி வாய்ப்புகளை உருவாக்குவது என்பது குறித்தும் இன்றையக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பல்வேறு குடும்ப சூழல் மற்றும் புறக் காரணிகளால் கல்வியை முழுமையாக முடிக்காத மாணவர்களும் பொருத்தமான வேலைவாய்ப்பைப் பெறுவதன்வழி, அவர்களுக்கான வாழ்வாதாரமும் உறுதிசெய்யப்படும் என்ற கருத்தின் அடிப்படையில் மித்ரா அதிகாரிகள் இந்த நிறுவனங்களுடன் பேசி வருகின்றனர் என்றும் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.