கோலாலம்பூர்: நாட்டின் நிதி நிலைமையை மீண்டும் சரிபடுத்துவதற்காக அதன் சில சொத்துக்களை விற்று நிதி திரட்டுவதை அரசாங்கம் கவனித்து வருவதாக பிரதமர் மகாதீர் முகமட் கூறினார்.
உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள அத்தியாவசியமற்ற சொத்துக்களை நல்ல விலைக்கு விற்பனை செய்வதன் மூலம் இது சாத்தியப்படும் என்று அவர் கூறினார்.
விற்கக்கூடிய சொத்துக்களின் மேலதிக விவரங்களைக் கேட்டபோது, டாக்டர் மகாதிர், சரியான விலையை உறுதிப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அவரால் அவ்வாறு செய்ய இயலாது என்று குறிப்பிட்டார்.
1எம்டிபி காரணமாக இழந்த பணத்தை மீட்டெடுக்க நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் முயற்சிப்பதாக டாக்டர் மகாதீர் கூறினார். மேலும் அவரது நிருவாகம் முந்தைய நிருவாகத்தின் கடனை ஏற்றுள்ளதைஅ அவர் சுட்டிக் காட்டினார்.
சொத்துக்களை விற்பதைத் தவிர, கோலாலம்பூர்–சிங்கப்பூர் அதிவேக இரயில் இணைப்புத் திட்டத்தை புத்ராஜெயா ஒத்திவைத்துள்ளதாகவும், தற்போது உடனடியாக தேவையில்லாத பிற திட்டங்களையும் இரத்து செய்துள்ளதாகவும் டாக்டர் மகாதீர் கூறினார்.