கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வளர்ப்பு மகனான தொழிலதிபர் ரிசா ஷாஹ்ரிஸ் அப்துல் அசிஸ் இன்று செவ்வாய்க்கிழமை 1எம்டிபி நிதியை தவறாக பயன்படுத்திய வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் காணப்பட்டார்.
கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி முன் விசாரணைக்குரிய சாட்சி அம்ஹாரி எஃபெண்டி நசருடின் அடையாளம் காணப்படுவதற்காக ஏழு நபர்களில் ரிசாவும் இடம் பெற்றிருந்தார்.
1எம்டிபி நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக அமெரிக்காவின் நீதித்துறையின் நீதிமன்ற ஆவணங்களில் ரிசாவின் பெயர் பலமுறை குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ரெட் கிரானைட் பிக்சர்ஸ் வாயிலாக குட் ஸ்டார் லிமிடெட் மற்றும் ஆபர் இன்வெஸ்ட்மென்ட் பிஜேஎஸ் லிமிடெட் மூலம் அவருக்கு நிதி கிடைத்ததாக அமெரிக்க நீதித்துறை கூறியது.
ரிசா, ரெட் கிரானைட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிருவாக அதிகாரியாவார். கடந்த மார்ச் 2018-இல், இந்நிறுவனம் 60 மில்லியன் அமெரிக்க டாலரை அமெரிக்க அரசிடம் ஒப்படைக்க ஒப்புக்கொண்டது.
மலேசியாவில் அவர் 1எம்டிபியிலிருந்து தவறாக எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் 248 மில்லியன் அமெரிக்க டாலர் பண மோசடி குற்றச்சாட்டுக்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும்.