கோலாலம்பூர்: காவல் துறை, குடிநுழைவுத் துறை மற்றும் சுங்கத் துறை போன்ற அமலாக்க அதிகாரிகள் உடலில் மறைக்காணிகள் பொருத்தப்படுவதை அரசாங்கம் ஒப்புக் கொண்டதாக பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார். இது அதிகாரிகள் தொடர்பான குற்றச் செயல்களைத் தீர்க்கும் என்று பிரதமர் கூறினார்.
விசாரணையில் ஈடுபடும் நபரை அடிப்பது போன்ற கடமையில் இருக்கும்போது அதிகாரிகளால் முறைகேடு செய்யப்பட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதால், உடலில் மறைக்காணிகளைப் பொருத்துவதற்கான பரிந்துரை ஒப்புக் கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
“அதிகாரிகள் தனது உடலில் மறைக்காணியை வைத்திருப்பர். அவர்கள் பேசும்போது அல்லது பிறர் பேசும்போது, அந்த அதிகாரி அடுத்த நபருடன் என்ன செய்கிறார் என்பதை நாம் காணலாம்” என்று இன்று நடந்த ஊழல் தடுப்பு அமைச்சரவைக் குழுவின் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பின்னர் அவர் கூறினார்.
எவ்வாறாயினும், இந்த பரிந்துரை அரசாங்கத்திற்கு செலவுகளை ஏற்படுத்தும் என்பதால், இதற்கான அமலாக்க தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று டாக்டர் மகாதீர் கூறினார்.