கோலாலம்பூர்: பிற நாடுகளில் புகை மூட்டத்திற்கு காரணமான மலேசிய நிறுவனங்களைத் தண்டிப்பதற்காக, நாடுகடந்த புகைமூட்டச் சட்டத்தை உருவாக்க புத்ராஜெயா முயற்சி செய்வதாக எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர் இயோ பீ யின் தெரிவித்தார்.
அமைச்சரவை தொடர முடிவு செய்தால் இச்சட்டத்தை உருவாக்க தனது அமைச்சு தயாராக உள்ளதாக அவர் கூறினார்.
“சட்டத்தை எவ்வாறு உருவாக்குவது மற்றும் சட்டத்தை எவ்வாறு உள்ளடக்குவது என்பது பற்றியும் நான் அரசாங்க தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனையைப் பெறுவேன்” என்று இயோ இன்று சுபாங்கில் உள்ள விமானப்படை தளத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்தோனிசிய அரசாங்கம் முன்னதாக நான்கு மலேசிய நிறுவனங்களான சைம் டார்பி பிளான்டேஷன், ஐஓஐ கார்ப்பரேஷன், டிடிஎம் பெர்ஹாட் மற்றும் கோலாலம்பூர் கெப்போங் பெர்ஹாட் போன்றவை காட்டுத் தீயினால் ஏற்பட்ட புகை மூட்டத்திற்குக் காரணம் என்று பெயர் குறிப்பிட்டிருந்தது.
சைம் டார்பி மற்றும் ஐஓஐ இது குறித்து மறுத்துள்ளன நிலையில், கேஎல்கே அதன் துணை நிறுவனத்தில் தீ ஏற்பட்டதாக ஒப்புக்கொண்டது.
ஒரு புதிய சட்டத்தை உருவாக்குவதைத் தவிர, மலேசியாவும் ஆசியானுடன் நீண்ட காலமாக புகை மூட்டப் பிரச்சனையை சமாளிக்க, மலேசியா ஒரு நடைமுறையைக் கொண்டு வரவுள்ளது என்று இயோ தெரிவித்தார்.
“ஒரு நாடு என்ற வகையில், நாடுகடந்த புகை மூட்டப் பிரச்சனையை மட்டும் தன்னிச்சையாக முறியடிக்க முடியாது. அனைத்துலக மற்றும் பிராந்திய மட்டத்தில் நமக்கு ஒத்துழைப்பு தேவை” என்று அவர் கூறினார்.