கோலாலம்பூர்: மலிண்டோ ஏர் மற்றும் லயன் ஏர் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட பயணிகள் தரவு ஊடுருவல் தொடர்பான முழுமையான அறிக்கைக்காக காத்திருப்பதாக தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
பயணிகள் தரவுகளின் ஊடுருவல் குறித்து தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
“அது குறித்த தகவல் எங்களுக்கு கிடைத்தது. மேலும் ஒரு முழுமையான அறிக்கையை எனக்கு வழங்குமாறு கோரியுள்ளேன். எந்தவொரு கருத்தையும் தெரிவிப்பதற்கு முன்னர் நான் அறிக்கைக்காகக் காத்திருக்கிறேன். இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பு அனைத்து உண்மைகளையும் மறுபரிசீலனை செய்வது எனக்கு முக்கியம்,” என்று அவர் இன்று வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த ஊடுருவல் மூலமாக கடப்பிதழ் எண்கள், வீட்டு முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் உள்ளிட்ட மில்லியன் கணக்கான பயணிகளின் தகவல்களை இணைய தரவு குழுக்கள் மூலம் பரப்பப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் குறித்த அறிக்கைக்கு கால அவகாசம் இருக்கிறதா என்று கேட்டதற்கு, கோபிந்த் எந்த காலக்கெடுவும் இல்லை, ஆனால் அது விரைவில் கிடைக்கப்படும் என்று நம்புவதாகத் தெரிவித்தார்.
நேற்று புதன்கிழமை மலிண்டோ ஏர் தலைமை இயக்க அதிகாரி சந்திரன் ராம மூர்த்தி ஊடகங்களுடன் தொடர்பு கொண்டபோது ஊடுருவலை உறுதிப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
தற்போது இந்த விவகாரம் குறித்து விமான நிறுவனம் விசாரித்து வருவதாகவும், மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தை (எம்சிஎம்சி) தொடர்பு கொண்டுள்ளதாகவும் சந்திரன் தெரிவித்துள்ளார்.