ஜோகூர் பாரு: காவல் துறை, குடிநுழைவு மற்றும் சுங்கத்துறை போன்ற சட்ட அமலாக்க அதிகாரிகள் மீது உடல் மறைக்காணிகளைப் பொருத்துவதற்கான அரசாங்கத்தின் முடிவை பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் அப்துல் காரிம் விமர்சித்துள்ளார்.
அமலாக்கப் பிரிவினரை குற்றவாளிகள் மற்றும் நம்பமுடியாத இயந்திரங்கள் போல கருதக்கூடாது என்று அவர் கூறினார்.
“பிரதமரும், அமைச்சரவையின் அனைத்து உறுப்பினர்களும் காவல்துறை, குடிநுழைவு, மற்றும் சுங்கத் துறை அமலாக்க அதிகாரிகள் கண்ணியமானவர்கள் என்பதை அங்கீகரிக்க வேண்டும். அவர்களை சங்கடப்படுத்த வேண்டாம்” என்று அவர் கேட்டுக் கொண்டார்.
அமலாக்க அதிகாரிகள் பிடியில் உள்ள நபர்களை அடிப்பது, இலஞ்சம் வாங்குவது போன்ற முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காக அரசாங்கம் உடல் மறைக்காணியை முன்மொழிந்ததாகவும், அதற்கு பிரதமரும் உடன்படுவதாகவும் நேற்று வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.
இது அரசாங்கத்தின் செலவை உள்ளடக்கியது என்பதால் செயல்படுத்தப்படும் தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.