கோலாலம்பூர், ஏப்ரல் 5 – எதிர்வரும் 13 ஆவது பொதுத்தேர்தலில் லாபுவான் கூட்டரசுப் பிரதேசத்தில், பாஸ் கட்சியின் சார்பாகப் போட்டியிட, அக்கட்சியின் தகவல் தொடர்புத் தலைவர் ஹட்னான் முகமட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து லாபுவான் கூட்டரசுப் பிரதேச பாஸ் கட்சியின் ஆணையர் ஹாஜி முகமத் நோர் முகமத் கூறுகையில்,
“லாபுவான் பகுதியைச் சேர்ந்தவரான ஹட்னான் முகமத், தனது தொகுதியில் உள்ள சமூகப் பணிகளில் அதிக ஆர்வத்தையும், உழைப்பையும் காட்டி வந்தார். எனவே அதனை அடிப்படையாகக் கொண்டு அவர் பாஸ் கட்சியின் வேட்பாளராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் ஷெல் எண்ணெய் நிறுவனத்தில்(Shell Petroleun Company) பணியாற்றிவரும் ஹட்னான், சபா எண்ணெய் நிறுவனப் பணியாளர்கள் சங்கத்தின் துணைத்தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்” என்று தெரிவித்தார்.
வரும் பொதுத் தேர்தலில் லாபுவான் கூட்டரசுப் பிரதேசத்தை, அம்னோவின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரான யூசுப் மகாலிடமிருந்து, பாஸ் கைப்பற்றுமா என்று ஹாஜி முகமத்திடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு,
“நிச்சயமாக கைப்பற்றும்” என்று தெரிவித்தார்.
அதே நேரத்தில், லாபுவான் தொகுதியில் பிகேஆர் கட்சியும் போட்டியிடப்போவதாக அதன் துணைத் தலைவர் அஸ்மின் அலி எடுத்திருக்கும் முடிவு தனக்கு வருத்தமளிக்கும் வகையில் இருப்பதாகவும் ஹாஜி முகமத் தெரிவித்துள்ளார்.