கோலாலம்பூர்: உடல் மறைக்காணிகளைப் பயன்படுத்துவதால் காவல்துறை அதிகாரிகளை அவதூறு செய்வதைத் தடுக்க முடியும் என்று காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.
எனவே இந்த விவகாரம் தொடர்பான பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டின் முன்மொழிவை அவர் வரவேற்பதாகவும், மேலும் அது செயல்படுத்தப்படுவது விரைவுபடுத்தப்படும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
“இது காவல் துறையினருக்கு மிகவும் நல்ல செய்தியாகும். தேவையான உபகரணங்களை மேம்படுத்துவதற்கு எங்களிடம் பல விண்ணப்பங்கள் உள்ளன. இதனால் உறுப்பினர்கள் பணிகளை மிகவும் திறமையாகவும், அவதூறுகளிலிருந்து பாதுகாக்கவும் முடியும். இந்த மறைக்காணிகள் மூலம் அவர்கள் மோசமான வேலைகளைச் செய்வதைத் தடுக்கும். அவர்கள் கடமைகளில் இருந்து விலக மாட்டார்கள்” என்று அவர் இன்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஊழல் போன்ற முறைகேடு தொடர்பான வழக்குகளுக்கு தீர்வு காண காவல் துறை, குடிநுழைவு மற்றும் சுங்கத் துறை போன்ற சட்ட அமலாக்க அதிகாரிகள் மீது உடல் மறைக்காணிகளைப் பயன்படுத்த அரசாங்கம் ஒப்புக் கொண்டதாக நேற்று மகாதீர் தெரிவித்திருந்தார்.