Home One Line P1 12 டன் கொக்கேய்ன் – 2.4 பில்லியன் ரிங்கிட் மதிப்பு – பினாங்கில் பிடிபட்டது

12 டன் கொக்கேய்ன் – 2.4 பில்லியன் ரிங்கிட் மதிப்பு – பினாங்கில் பிடிபட்டது

683
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் – கப்பலில் ஏற்றிச் செல்லத் தயாராகக் காத்திருந்த மூன்று பெரிய கொள்கலன்கள் – அவற்றின் உள்ளே இருந்ததோ, 60 நிலக்கரி மூட்டைகள். மிகச் சாதாரணமாக பினாங்கிலிருந்து புறப்பட்டுச் சென்றிருக்கக் கூடிய இந்தக் கொள்கலன்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கொக்கேய்ன் போதைப்பொருள்.

அதுவும் கொஞ்ச நஞ்சமல்ல! 12 டன்கள்! அவற்றின் மதிப்பு மட்டும் சுமார் 2.4 பில்லியன் ரிங்கிட் என காவல் துறை அறிவித்திருக்கிறது. அதாவது ஒரு கிலோ கொக்கேயினின் விலை 200,000 ரிங்கிட்!

மிகச் சாதாரணமாக இந்தப் போதைப் பொருள் பினாங்கிலிருந்து புறப்பட்டிருக்கும். காரணம், காவல் துறையில் போதைப் பொருளை மோப்பம் பிடிக்கும் நாய்கள் கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இந்த போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

ஆனால், இத்தகைய போதைப் பொருட்களைக் கண்டுபிடிக்கும் நவீனத் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள மலேசிய இராசயன இலாகாவின் உதவியுடன் இந்த போதைப்பொருள் பிடிபட்டிருக்கிறது.

பினாங்கு போக்குவரத்துக்கான நடு மையமாக (transit point) பயன்படுத்தும் அனைத்துலக போதைப் பொருள் கும்பல் இந்தப் போதைப் பொருளைக் கடத்த செய்திருந்த முயற்சிகளைத் தங்களின் புலனாய்வுகள் மூலம் காவல் துறையினர் முறியடித்திருப்பதாக காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹமிட் பாடோர் தெரிவித்திருக்கிறார்.

மலேசியாவில் இதுவரைக் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களிலேயே கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி ஷா ஆலாமில் கைப்பற்றப்பட்ட 500 கிலோ கெத்தாமின் மற்றும் 3.23 டன் கொக்கெய்ன் ஆகியவைதான் – சுமார் 500 மில்லியன் ரிங்கிட் என்ற மதிப்பில் – மலேசியாவில் பிடிபட்ட மிகப் பெரிய போதைப் பொருள் என கணக்கிடப்பட்டிருந்தது.

ஆனால் இப்போதோ பினாங்கில் பிடிபட்ட கொக்கேய்ன்தான் மலேசிய வரலாற்றில் மிகப் பெரிய போதைப் பொருள் அளவு என வர்ணிக்கப்படுகிறது.

இதன் தொடர்பில் இந்த கொள்கலன்களின் ஏற்றுமதிக்காக ஏற்பாடுகள் செய்த ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.