கோலாலம்பூர்: பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கான நேரத்தையும் தேதியையும் தாமே நிர்ணயிக்க உள்ளதாக துன் டாக்டர் மகாதீர் முகமட் வலியுறுத்தியுள்ளார்.
மலேசியாவின் இஸ்லாமிய கலை அருங்காட்சியகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை, பாரம்பரிய மற்றும் தேசிய கலாச்சார சாசனத்தை வழங்கிய பின்னர் “நான் இது குறித்து பின்னர் அறிவிப்பேன் … எனது வாக்குறுதியை நிறைவேற்றுவேன்” என்று அவர் கூறினார்.
கடந்த புதன்கிழமை ப்ளூம்பெர்க் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், அன்வார் 2020-ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் பிரதமராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
பிகேஆர் தலைவரும் போர்ட் டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வார், அவரது துணைத் தலைவரும், பொருளாதார விவகார அமைச்சருமான டத்தோஶ்ரீ அஸ்மின் அலி அல்லது பிரதமரின் மகனான கெடா மந்திரி பெசார் டத்தோஶ்ரீ முக்ரிஸ் மகாதீர், அவருக்கு பதிலாக பிரதமர் பதவிக்கு பரிசீலிக்கப்படுவார்கள் என்ற செய்திகளை நிராகரித்தார்.