Home One Line P1 “காவல் துறையினர் அத்துமீறியுள்ளனரா? குடிநுழைவு பதிவை அழித்தது யார்?”- ஜனார்த்தனனின் குடும்ப வழக்கறிஞர்

“காவல் துறையினர் அத்துமீறியுள்ளனரா? குடிநுழைவு பதிவை அழித்தது யார்?”- ஜனார்த்தனனின் குடும்ப வழக்கறிஞர்

1041
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த சனிக்கிழமை காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கையைச் சேர்ந்த ஜனார்த்தனனின் உறவினர்கள் பாதிக்கப்பட்டவருக்கு எந்தவொரு குற்றவியல் வழக்குகள் இருப்பதாகவும், மலேசியாவில் நுழைந்ததற்கு எந்தவொரு பதிவும் இல்லை எனும் காவல் துறையின் அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து அதற்கான ஆதாரங்களை முன்வைத்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி ரவாங்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட மூன்று பேரில் வி.ஜனார்த்தனனும் ஒருவராவார்.

2016-இல் செந்தூலில் நடந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு கும்பலில் ஜனார்த்தனன் உறுப்பினராக இருந்ததாக சிலாங்கூர் காவல் துறை ஊடகங்களில் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

இங்கிலாந்தில் நிரந்தர குடியுரிமை அந்தஸ்துள்ள ஜனார்த்தனன் அண்மையில்தான் மலேசியாவிற்கு வந்ததாகவும், குடிநுழைவுத் தேடலில் அவர் நுழைந்ததற்கான எந்த பதிவுகளும் கிடைக்கவில்லை என்றும் காவல் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில், ஜனார்த்தனனின் மகன் லோகிதரன், தனது தந்தை 2016-இல் இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத்தில் உள்ள ஒரு விற்பனை மையத்தில் மேலாளராக பணிபுரிந்தார் என்று தெரிவித்தார். எனவே, தனது தந்தை மலேசியாவில் எந்தக் குற்றமும் செய்ய இயலாது, ஏனெனில் அவர் அப்போது இங்கிலாந்தில் இருந்தார் என்று தெளிவுப்படுத்தினார்.

லோகிதரன் தனது தந்தையும் அவரது குடும்பத்தினரும் மலேசியாவிற்கு வந்தடைந்த விமானத்தின் விவரங்களையும் ஊடக பார்வைக்கு முன் வைத்தார். ஆகஸ்ட் 26-ஆம் தேதி லண்டனின் கேட்விக் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, மறுநாள் கியூஆர்852 கத்தார் ஏர்வேஸ் விமானம் வழியாக கோலாலம்பூர் விமான நிலையத்திற்கு வந்த பயணச் சீட்டு அதனை உறுதிபடுத்தியது.

விமான பயணச் சீட்டின் விவரங்கள்படி ஜனார்த்தனன் செப்டம்பர் 23-ஆம் தேதி இலண்டனுக்கு திரும்பிச் செல்வார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆவணங்களின்படி, ஜனார்த்தனனின் குடிநுழைவுப் பதிவுகளில் காவல் துறையினர் தலையிட்டதாக குடும்ப வழக்கறிஞர் பி.உதயகுமார் கூறியுள்ளார்.

இப்போது சிலாங்கூர் காவல்துறைத் தலைவரும் (நோர் அஸாம் ஜமாலுடின்) மற்றும் சிஐடியின் தலைவரும் (கோலாலம்பூர் போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுத் துறையின் இயக்குநர் அட்னான் அஸிசோன்) பொய்யர்கள். அவர்கள் குடிநுழைவு  பதிவுகளை அத்துமீறியுள்ளார்களா? குடியேற்ற பதிவை அழித்தவர் யார்?” என்று உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

லோகிதரனின் தாயார் ஜி.மோகனம்பாளும் துப்பாக்கிச் சூட்டு சம்பத்தின் போது இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர் அதில் கொல்லப்படவில்லை என்றும் காணவில்லை எனும் கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.