Home One Line P2 கீழடி: இனத்தைக் கடந்து, மனித நாகரிகத்தின் அடுத்தக்கட்ட நகர்வாக பார்க்க வேண்டும்!

கீழடி: இனத்தைக் கடந்து, மனித நாகரிகத்தின் அடுத்தக்கட்ட நகர்வாக பார்க்க வேண்டும்!

1185
0
SHARE
Ad

தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கீழடியில் உள்ள தொல்பொருள் தளத்தில் கிடைத்த கலைப்பொருட்கள் கி.மு. 580-ஆம் ஆண்டு தேதியிடப்பட்டுள்ளன.  அவை சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சியாக இருக்கலாம் எனும் கருத்தியல்களும் உறுதியடையும் நிலையில் உள்ளன.

இதனை அடிப்படையாகக் கொண்டு, தமிழக சங்ககாலம் என்பது மேலும் 300 ஆண்டுகள் பழமையானது எனத் தெரியவந்திருப்பதாக தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடி கிராமத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறை நடத்திய அகழ்வாராய்ச்சியில், 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலிருந்து மனிதர்கள் அங்கு வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்தப் பகுதியில் மேலும் ஆய்வுகளை மேற்கொள்ள கீழடி அகழ்வாய்வு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா விண்ணப்பித்திருந்த நிலையில், அவர் அங்கிருந்து அசாமுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், அங்கு அகழ்வாய்வைத் தொடர தமிழக தொல்லியல் துறை முடிவு செய்தது.

#TamilSchoolmychoice

அதற்குப் பிறகு மாநில தொல்லியல் துறை சார்பில் அகழ்வாய்வு தொடர்ந்து நடைபெற்று வந்தது.  அந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள் மீது செய்யப்பட்ட ஆய்வின் முடிவுகளை கடந்த வியாழக்கிழமை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மஃபா பாண்டியராஜன், தொல்லியல் துறை செயலர் த. உதயசந்திரன் ஆகியோர் வெளியிட்டனர்.

கீழடியில் கிடைத்த ஆறு பொருட்கள் அமெரிக்காவிற்கு ஆய்விற்காக அனுப்பப்பட்டன. அதில் கிடைத்த முடிவுகளின்படி, அந்தப் பொருட்கள், கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தை சேர்ந்தவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

கீழடியில் 353 செண்டி மீட்டர் ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580-வது ஆண்டையும் 200 செண்டி மீட்டர் ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205-வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த இரு மட்டங்களுக்கு கீழேயும் மேலேயும் பொருட்கள் இருப்பதால், கீழடியின் காலகட்டம் கி.மு. ஆறாம் நூற்றாண்டு முதல் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டு வரையிலானது என தொல்லியல் துறை முடிவுக்கு வந்துள்ளது.

இந்தியாவில் கிடைத்த வரிவடிவங்களில் சிந்து சமவெளியில் கிடைத்த வரிவடிவங்களே மிகப் பழமையானவை. சிந்துவெளி பண்பாடு மறைந்து தமிழ் பிராமி எழுத்து தோன்றியதற்கு இடையில் கீறல் வடிவில் ஒரு வரிவடிவம் இருந்ததாக தொல்லியலாளர்கள் கருதுகின்றனர். அதுவே இங்கு கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பெரும்பாலான ஓடுகளில் காணக்கிடைப்பதாகக் கூறப்படுகிறது.

சிந்து சமவெளி நாகரிகத்தின் மக்கள் நவீன தமிழர்களின் மூதாதையர்களாக இருக்கலாம் என்று தமிழ் நாட்டில் உள்ள திராவிட இயக்க அரசியல்வாதிகள் நீண்ட காலமாக கூறி வருவதால், தற்போதைய இந்த அறிக்கை அதற்கு கூடுதல் வலு சேர்க்கும் விதமாக அமைந்துவிட்டது. இருப்பினும்,  சிந்து சமவெளி நாகரிகம் மற்றும் கீழடி கண்டுபிடுப்புகளின் இணைப்பை நிறுவுவதற்கான தொல்பொருள் மற்றும் மரபணு சான்றுகள் இதுவரையில் வலுவாக இல்லை என்று ஒரு சில தரப்பினர் குறிப்பிட்டு வருகிறார்கள்.

முன்னதாக ஆதிச்சநல்லூர்,  கொர்கை,  அழகன்குளம்,  கொடுமணல்,  கரூர்,  தெரிவேலி,  உரையூர்,  மங்குலம், பேருர் மற்றும் பிற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் இதுபோன்ற கீறல் வடிவிலான எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட உடைந்த பானை ஓடுகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றின் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டாகக் கருதப்பட்டது. ஆனால், தற்போது கீழடியில் கிடைத்த ஆய்வு முடிவுகளின்படி, தமிழ் பிராமி கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஆகவே 2,600 ஆண்டுகளுக்கு முன்பாக கீழடியில் வாழ்ந்தவர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தார்கள், எழுதத் தெரிந்திருந்தார்கள் என்ற முடிவுக்கு தொல்லியில் துறை வந்துள்ளது. கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை விலங்குகளினுடையது.

ஆகவே, கீழடியில் வாழ்ந்த சமூகம் பெரும்பாலும் ஆடு, மாடுகளை வளர்த்த சமூகமாக இருந்திருக்கலாம் என்ற முடிவுக்கும் ஆய்வாளர்கள் வந்துள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை செய்யப்பட்ட அகழ்வாய்வுகளில் சுட்ட செங்கல்களால் ஆன கட்டடங்களுடன் நகர நாகரீகம் இருந்தது இங்குதான் முதன் முதலில் வெளிப்பட்டுள்ளது. இங்கு கிடைத்த பிராமி எழுத்துகளை வைத்து சங்க காலம் மேலும் மூன்று நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்லலாம் எனக் கருதப்படுகிறது.

சிந்து சமவெளி நாகரீகம் கிட்டத்தட்ட கி.மு. ஆறாம் நூற்றாண்டில் தோன்றியது. ஆனால், அதற்கு இணையான காலகட்டத்தில் தமிழகத்தில் எந்த நகர நாகரீகமும் இருந்ததற்கான ஆதாரங்கள் இதுவரையிலும் கிடைத்ததில்லை. முதன் முதலாக கீழடியில் அதே காலகட்டத்தில் நகர நாகரீகத்திற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

இது பல்வெறு விமர்சங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் இடையே வெளியிடப்பட்டுள்ளது. திராவிடத்தை போற்றுபவர்களுக்கு இது நற்செய்தியாக அமைந்தாலும், அரசியல், இனக்குழு ரீதியாக, இந்த வரலாற்றுக் கண்டுபிடிப்புகளும் சாதாரணமான கண்ணோட்டத்தோடு காணப்பட்டு விமர்சிக்கப்படுவது வேதனையளிக்கும் விவகாரமாகவே தேங்கி நிற்கிறது.

வரலாறானாது, ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் இடையே பல்வேறு நபர்களால் பல்வேறு கருத்தியல்களைக் கொண்டு மாற்றியமைக்கப்படும். இவ்வாறான செயற்பாடுகளை சரி, தவறு என்று நாம் கருதுவது மூடத்தனம். ஒவ்வொரு காலக்கட்டதிற்கும் இது போன்ற அவிழ்க்கப்படாத முடுச்சுகள் அதன் வெளிபடும் காலத்தை அடைந்ததும், தம்மை வெளிப்படுத்திக் கொள்ளும் என்பதை நிதர்சனம். அவ்வாறு வெளிப்பட ஏங்கும் இம்மாதிரியான வரலாற்று சான்றுகளை இனம், சாதி ரீதியாக கிரகித்துக் கொள்ளாமல் அக்கால மனிதர்களின் அழகான வாழ்வியலாகவே காண வேண்டியுள்ளது.

-நந்தன்