கோலாலம்பூர்: அவரவர் தொகுதிகளில் நடந்த கட்சித் தேர்தல்களில் தோல்வியுற்ற அமானா கட்சியின் பல உயர்மட்ட தலைவர்கள் இரண்டாவது வாய்ப்பு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று திங்கட்கிழமை, கட்சித் தலைமை பல பகுதிகளில் மறுதேர்தல் நடத்துமாறு அறிவுறுத்திய பின்னர் இது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
அவர்களில் பேராக் முன்னாள் முதல்வர் முகமட் நிசார் ஜமாலுடின், அமானா இளைஞர் பகுதி துணைத் தலைவர் பாயிஸ் பாட்ஸில், சிலாங்கூர் இளைஞர் பகுதித் தலைவர் அப்பாஸ் அஸ்மி மற்றும் அமானா மகளிர் தலைவர் டாக்டர் சித்தி மரியா மஹ்முட் அடங்குவர்.
முன்னதாக, இவர்கள் கட்சித் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு, ஒரு சிலர் அந்தந்த தொகுதிகளில் கிட்டத்தட்ட அகற்றப்படும் நிலை ஏற்பட்டது.
ஆதாரங்களின்படி, பாயிஸ், முகமட் நிசார் மற்றும் அப்பாஸ் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டால், அவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசியாகினி பதிவிட்டுள்ளது.
81 தொகுதிகளில், 655 கிளைகளின் தேர்தலில் கட்சி எதிர்கொண்ட தொழில்நுட்ப சிக்கல்களைத் தொடர்ந்து, தேர்தல் முடிவுகள் இரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அமானா தலைமையகத்தின் பலவீனங்கள் காரணமாக இது கருதப்படுகிறது. கட்சி தலைமையகம், பல்வேறு மட்டங்களின் நடந்த கூட்டங்களை மறுஆய்வு செய்யவோ, அதன் அறிக்கையை சங்க பதிவாளரிடம் சமர்ப்பிக்கவோ இல்லை என்று கூறப்படுகிறது.