நியூயார்க்: நாளை புதன்கிழமை நியூயார்க்கின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருக்கும் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டின் நிகழ்ச்சிக்கு யூத பரப்புரையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
உலக யூத காங்கிரஸ் தமது டுவிட்டர் பக்கம் வழியாக அதன் தலைவர் ரொனால்ட் லாடரின் விமர்சனத்தை பகிர்ந்து கொண்டது.
டாக்டர் மகாதீரை “யூத–விரோத உலகத் தலைவர்” என்று லாடர் வர்ணித்துள்ளார். மேலும், அப்பல்கலைக்கழகம் இதுபோன்ற பார்வையை உடையவர்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்றும் கூறினார்.
“சகிப்புத்தன்மை மற்றும் ஒன்றினைப்புக்கு பெருமை பேசும் ஒரு பல்கலைக்கழகம் யூதர்களை அவமதித்த தலைவர்களுக்கு பேசுவதற்கு இடம் கொடுத்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது” என்று லாடர் 2018-இல் 73-வது ஐநா பொதுச் சபையில் மகாதீரின் உரையை குறிப்பிட்டு கூறினார்.
“ஐரோப்பா 12 மில்லியன் யூதர்களில் ஆறு மில்லியனைக் கொன்றது. ஆனால், இன்று யூதர்கள் இந்த உலகை ஆளுகிறார்கள். அவர்களுக்காக மற்றவர்களைப் போராடவும் இறக்கவும் பயன்படுத்துகிறார்கள்” என்று டாக்டர் மகாதீர் மேற்கோளிட்டதை லாடர் சுட்டிக் காட்டினார்.
டாக்டர் மகாதீரை வரவேற்கும் முடிவில் கொலம்பியா பல்கலைக்கழகம் வெட்கப்பட வேண்டும் என்று லாடர் கூறினார்.
“நியூயார்க்கில் ஒரு பெரிய பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப்படும் போது, யூத எதிர்ப்பு சம்பவங்கள் அங்கு அதிகரித்து வருவதில் ஆச்சரியமில்லை” என்று அவர் கூறினார்.
தி நியூயார்க் போஸ்ட்டின் படி, கொலம்பியா பல்கலைக்கழகத் தலைவர் லீ பொலிங்கர் அவர்களின் உலகத் தலைவர்கள் மன்றத்தின் ஒரு பகுதியாக டாக்டர் மகாதீரின் தோற்றத்தை தற்காத்துப் பேசினார். சட்டத்தின் ஆட்சி மற்றும் பன்முகத்தன்மை பற்றி அவர் பேசுவதாகக் கூறியுள்ளார்.