1969-ஆம் ஆண்டில் “சாட் இந்துஸ்தானி” என்ற திரைப்படத்தின் மூலம் இந்திப் படவுலகில் காலடி வைத்த அமிதாப் பச்சன் 40-ஆம் ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் தனது 76-வது வயதிலும் சளைக்காமல் பல படங்களில் – பல்வேறு வேடங்களில் – நடித்து வருகிறார். இரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
ஏற்கனவே பல இந்திய அரசாங்க விருதுகளைப் பெற்ற அமிதாப், 1984-இல் பத்மஸ்ரீ விருதையும், 2001-ஆம் ஆண்டில் பத்ம பூஷண் விருதையும், 2015-இல் பத்ம விபூஷண் விருதையும் பெற்றார்.
அமிதாப்புக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதை இந்திய தகவல் மற்றும் செய்தித் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது டுவிட்டர் பக்கத்தின் மூலமாக அறிவித்திருக்கிறார்.
தொடக்க காலத்தில் சினிமா இந்தியாவில் கால்பதிக்க அரும்பாடுபட்ட பால்கே என்பவரின் பெயரால் இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்தியத் திரைப்படவுலகினருக்கு வழங்கப்படும் விருதுகளில் மிக உயரிய விருதாக இது கருதப்படுகிறது.
தமிழ்ப் படவுலகில் இதுவரையில் கே.பாலசந்தர், சிவாஜி கணேசன், எல்.வி.பிரசாத் போன்றவர்களுக்கு ஏற்கனவே இந்த தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டிருக்கிறது.