சென்னை: தமிழ் திரைப்படங்களின் முன்னணி தயாரிப்பாளரான ஞானவேல் ராஜா நடிகர் கமல்ஹாசன் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
2015-ஆம் ஆண்டு வெளியான உத்தமவில்லன் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கமல்ஹாசன் தன்னை அணுகியதாகவும், தமது தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதாகக் கூறி, 10 கோடி ரூபாய் முன்பணத்தைக் கோரியதாகவும் ஞானவேல் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, தாம் கொடுத்த வாக்குறுதியின்படி தமது படத்தில் நடித்துக் கொடுக்க கமல்ஹாசன் முன்வரவில்லை என்றும், இதுவரையிலும் வாங்கிய பணத்தைக் கொடுக்கவும் இல்லை என்றும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
ஆயினும், இதற்கு மறுப்புத் தெரிவித்து, கமல்ஹாசன் தரப்பு வெளியிட்ட அறிக்கையில், இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திடம் மட்டுமே இது குறித்து பேசப்பட்டதாகவும், ஞானவேல் ராஜாவிடம் எந்த உத்தவாதமும் அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
தற்போது, ‘இந்தியன் 2′ படத்தில் விறுவிறுப்பாக நடித்து வரும் கமல்ஹாசனுக்கு எதிரான இந்த புகார் இரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.