ஜோர்ஜ் டவுன்: பினாங்கு பாயான் லெபாஸில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தேசத்துரோக மற்றும் இனவெறி கருத்துக்களை வெளியிட்ட மூன்று நபர்கள் சந்தேகத்தின் பேரில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பினாங்கு மற்றும் கெடாவில் மூன்று சோதனைகளில் 28 முதல் 42 வயது வரையிலான மூன்று உள்ளூர் ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.
புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை துணை தடயவியல், தரவுத்தளம், டிஎன்ஏ, மூலோபாய திட்டமிடல் இயக்குனர் டத்தோ முகமட் சுரைடி இப்ராகிம் கூறுகையில், பினாங்கு பட்டர்வொர்த்தில் 32 வயது இளைஞரை மதியம் 1.15 மணியளவில் காவல் துறை அதிகாரிகள் கைது செய்ததாகக் கூறினார்.
நேற்று வியாழக்கிழமை மாலை 5 மணி மற்றும் நள்ளிரவு 12.07 மணிக்கு கெடாவின் லுனாஸ் மற்றும் கோலா முடாவில் நடந்த இரண்டு சோதனைகளில் முறையே 28 மற்றும் 42 வயதுடைய இரண்டு ஆண்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
“விசாரணையில் மூன்று சந்தேக நபர்களும் எந்தவொரு குற்றவியல் பதிவுகளும் கொண்டிருக்கவில்லை என்பதைக் கண்டறிந்தோம். அவர்களின் கைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இன்று வெள்ளிக்கிழமை தடுத்து வைப்பதற்கான விண்ணப்பங்கள் செய்யப்படும். மேலும் தண்டனைச் சட்டம் பிரிவு 505 மற்றும் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998-இன் கீழ் மேலதிக விசாரணைகள் நடத்தப்படும்” என்று புக்கிட் அமானில் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
கடந்த திங்கள்கிழமை மாலை 4.45 மணியளவில் நடந்த சம்பவத்தில், தொழிற்சாலையில் பணிபுரிந்த 25 வயது இளைஞர் பெண் மேற்பார்வையாளர் ஒருவரையும், பாதுகாப்பு மேலாளரை வெட்டுக் கத்தி கொண்டு தாக்கியுள்ளார்.
47 வயதான அப்பெண் மேற்பார்வையாளர் பினாங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது, உடலின் பல பாகங்களில் பலத்த காயம் ஏற்பட்ட காரணத்தால் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.